இணைய வழி பட்டாவுக்கு புதிய பணியாளர் நியமிக்க கோரி நில அளவையர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்

இணைய வழி பட்டாவுக்கு புதிய பணியாளர் நியமிக்க கோரி நில அளவையர்கள் வருகிற 30-ந்தேதி விடுப்பு எடுத்து போராட்டம் நடத்துவது என திருச்சியில் நடந்த மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2018-08-19 22:45 GMT
திருச்சி,

தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் மாநில அளவிலான வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நேற்று திருச்சியில் நடந்தது. மாநில தலைவர் காயாம்பூ தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர்கள் முருகேசன், அண்ணா குபேரன் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாநில தலைவர் ப.குமாரவேல் வரவேற்று பேசினார். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தமிழகம் முழுவதும் ஆண்டுக்கு 32 லட்சம் பட்டா மாறுதல் மனுக்கள் இணைய வழியில் பதிவு செய்யப்படுகிறது. இந்த மனுக்களின் மீது தீர்வு காண அரசு புதிய பணியிடங்களை உருவாக்காமல் குறைந்த ஊழியர்களை கொண்டு பட்டா மாறுதல் வழங்க நிர்ப்பந்தம் செய்கிறது. இதனால் நில அளவை களப்பணியாளர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ள நேரிடுகிறது. எனவே இதற்காக புதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

மேலும் தமிழகம் முழுவதும் காலியாக உள்ள சுமார் 1,500 பணியிடங்களை அழிக்க முயற்சிக்காமல் அதனை நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும், துணை ஆய்வாளர் முதல் கூடுதல் இயக்குனர் வரை உள்ள பல்வேறு பதவி உயர்வுகள் திட்டமிட்டு காலதாமதம் செய்யப்படுகிறது. மக்களுக்கு விரைவாக பட்டா வழங்க சங்கங்கள் வைத்துள்ள 13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 30-ந்தேதி (வியாழக்கிழமை) நில அளவையர்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டமும், செப்டம்பர் மாதம் 4, 5, 6 ஆகிய தேதிகளில் தொடர் வேலை நிறுத்த போராட்டமும் நடத்துவது.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில பொதுச்செயலாளர் ராஜா தீர்மானங்களை விளக்கி பேசினார்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன், வருவாய் துறை அலுவலர் சங்க மாநில தலைவர் குமரேசன், கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். மாநிலம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாநில பொருளாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்