மங்களூருவில், கால்வாயில் அடித்து செல்லப்பட்ட 2 வாலிபர்களின் உடல்கள் மீட்பு குடும்பத்தினருக்கு மந்திரி யு.டி.காதர் நேரில் ஆறுதல்
மங்களூருவில், கால்வாயில் அடித்து செல்லப்பட்ட 2 வாலிபர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. வாலிபர்களின் குடும்பத்தினருக்கு மந்திரி யு.டி.காதர் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
மங்களூரு,
மங்களூருவில், கால்வாயில் அடித்து செல்லப்பட்ட 2 வாலிபர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. வாலிபர்களின் குடும்பத்தினருக்கு மந்திரி யு.டி.காதர் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
2 வாலிபர்கள் சாவுதட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பஜ்பே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட படுபெராரு கிராமம் மூடுபெராரு பகுதியை சேர்ந்தவர் சந்திரகாஷ் ஷெட்டி(வயது 35). பெர்முடா கிராமத்தை சேர்ந்தவர் திவாகர் கவுடா(32). இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர்கள் 2 பேரும் அப்பகுதியில் ஓடும் கால்வாயை கடக்க முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக அவர்கள் 2 பேரும் கால்வாயில் நீரில் அடித்து செல்லப்பட்டனர். இதில் அவர்கள் 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.
இந்த நிலையில் கால்வாயில் அடித்து செல்லப்பட்ட 2 வாலிபர்களின் உடல்களையும் தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தது. நேற்று காலை அவர்கள் 2 பேரின் உடல்களையும் தீயணைப்பு படைவீரர்கள் மீட்டனர். பின்னர் அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பிரேத பரிசோதனை முடிந்ததும் வாலிபர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தலா ரூ.5 லட்சம் நிவாரணம்இந்த நிலையில் கால்வாயில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த 2 வாலிபர்களின் வீடுகளுக்கும் தட்சிண கன்னடா மாவட்ட பொறுப்பு மந்திரி யு.டி.காதர் சென்றார். அவர் வாலிபர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதனையடுத்து மந்திரி யு.டி.காதர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
கால்வாயில் அடித்து செல்லப்பட்டு 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் மனதிற்கு வேதனை அளிக்கிறது. அவர்களின் குடும்பத்தினருக்கு நான் ஆறுதல் கூறியுள்ளேன். அரசிடம் பேசி உயிரிழந்த 2 வாலிபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் பெற்று தர நடவடிக்கை எடுப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.