நண்பரின் காதல் திருமணத்துக்கு உதவிய வாலிபர் கடத்தல் பெண்ணின் தந்தை உள்பட 4 பேர் கைது

பழவந்தாங்கலில், நண்பரின் காதல் திருமணத்துக்கு உதவிய வாலிபரை காரில் கடத்திச்சென்று அடித்து உதைத்ததாக பெண்ணின் தந்தை உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-08-19 00:00 GMT
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த மடிப்பாக்கம் ராம் நகரைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டியன் (வயது 47). இவருடைய மகள் புவனேஸ்வரி(19). கல்லூரியில் படித்து வந்த இவரும், பழவந்தாங்கல் ரகுபதி நகரைச் சேர்ந்த மதன்(22) என்பவரும் காதலித்து வந்தனர்.

மகளின் காதல் விவகாரம் அறிந்து எதிர்ப்பு தெரிவித்த செல்லப்பாண்டியன், மகளின் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு அவரை சொந்த ஊரான நெல்லைக்கு அனுப்பி வைத்தார். கடந்த வாரம் கல்லூரியில் மாற்றுச்சான்றிதழ் வாங்குவதற்காக தனது மகளுடன் பள்ளிக்கரணை வந்தார்.

காதலனுடன் சென்றார்

இதை அறிந்து அங்கு வந்த மதனுக்கும், செல்லப்பாண்டியனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் காதல் ஜோடி, மடிப்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இருவீட்டு பெற்றோரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது புவனேஸ்வரி, தான் மதனுடன்தான் செல்வேன். அவரையே திருமணம் செய்துகொள்வேன் என்று உறுதியாக கூறினார். அதற்கு மதனின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். ஆனால் செல்லப்பாண்டியன் எதிர்ப்பு தெரிவித்தார்.

இருவரும் திருமண வயதை அடைந்தவர்கள் என்பதால் புவனேஸ்வரியை அவரது காதலன் மதனுடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.

காரில் கடத்தல்

இவர்களின் காதலுக்கு மதனின் நண்பரான பழவந்தாங்கலை சேர்ந்த ஆனந்தபாண்டியன் என்பவருடைய மகன் அபிஷேக்(21) உதவியதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று காலை அபிஷேக், உடற்பயிற்சி கூடத்துக்கு செல்வதற்காக தனது வீட்டில் இருந்து வெளியே வந்தார். அப்போது காரில் வந்த செல்லப்பாண்டியன் உள்பட 4 பேர் திடீரென அபிஷேக்கை காரில் ஏற்றி கடத்திச்சென்றனர்.

காருக்குள் வைத்து, தனது மகள் எங்கே இருக்கிறாள்? என்றுகேட்டு செல்லப்பாண்டியன் உள்பட 4 பேரும் அபிஷேக்கை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதற்கிடையில் அபிஷேக்கின் தந்தை ஆனந்தபாண்டியன், தனது மகனை 4 பேர் காரில் கடத்திச்செல்வதாக பழவந்தாங்கல் போலீசில் புகார் செய்தார்.

4 பேர் கைது

இதையடுத்து பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமி உத்தரவின்பேரில் உதவி கமிஷனர் மோகன்தாஸ் தலைமையில் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சப்-இன்ஸ்பெக்டர் புனிதவள்ளி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மூவரசம்பட்டு குளக்கரை அருகே அபிஷேக்கை கடத்திச்சென்ற கார் வந்தது. காருக்குள் இருந்த அபிஷேக், தன்னை காப்பாற்றும்படி கூச்சலிட்டார். உடனே போலீசார், அந்த காரை மடக்கி பிடித்து அபிஷேக்கை பத்திரமாக மீட்டனர். அவரை கடத்தியவர்கள், காரில் இருந்து இறங்கி தப்பிச்செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கிபிடித்தனர்.

இது தொடர்பாக செல்லபாண்டியன், அவருடைய தம்பி மகனான மூவரசம்பட்டை சேர்ந்த கண்ணன்(25), அவருடைய நண்பர்களான பல்லாவரத்தை சேர்ந்த கார் டிரைவர் தினேஷ்(25), திரிசூலத்தை சேர்ந்த கார் மெக்கானிக் அன்புராஜ்(29) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் மீது கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்த போலீசார், கைதான 4 பேரிடமும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்