நகைக்கடை அதிபர் வீட்டில் 32 பவுன் நகை, ரூ.7 லட்சம் கொள்ளை கடை ஊழியர் கைது
சென்னை எம்.கே.பி. நகரில் உள்ள நகைக்கடை அதிபர் வீட்டில் 32 பவுன் நகை மற்றும் ரூ.7 லட்சத்தை கொள்ளையடித்த கடை ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பூர்,
சென்னை எம்.கே.பி. நகர் 15-வது தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரகுமார் (வயது 48). அதே பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் வியாசர்பாடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த ரகு (20) என்பவர் வேலை செய்து வந்தார்.
இவர் அடிக்கடி ராஜேந்திரகுமாரின் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். ராஜேந்திரகுமார் தனது வீட்டில் மறைவான இடத்தில் தங்கநகை, பணத்தை வைத்திருந்தார். இந்த நிலையில் அவர் வைத்திருந்த நகை, பணத்தில் 32 பவுன் நகையும், ரூ.7 லட்சமும் மாயமாகி இருந்தது. அவற்றை யாரோ கொள்ளையடித்து சென்று விட்டனர்.
கடை ஊழியர் கைது
இதுகுறித்து எம்.கே.பி. நகர் போலீஸ் நிலையத்தில் ராஜேந்திரகுமார் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைக் கடையில் வேலை பார்க்கும் ஊழியர்களிடம் விசாரித்தனர். அப்போது ரகு முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது, நகைக்கடை அதிபர் ராஜேந்திரகுமார் பணத்தையும், நகைகளையும் மறைத்து வைக்கும் இடம் ரகுவிற்கு நன்றாக தெரிந்துள்ளது. ரகு தனது தேவைக்கேற்ப கொஞ்சம்கொஞ்சமாக நகை, பணத்தை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து ரகுவை போலீசார் கைது செய்தனர்.