கடல்மீன் குஞ்சு பொரிப்பக செயல்பாடு மத்திய அரசு செயலர் நேரில் ஆய்வு

மண்டபம் யூனியன் சாத்தக்கோன்வலசையில் கடல் மீன் குஞ்சு பொரிப்பகத்தின் செயல்பாடுகள் குறித்து மத்திய அரசு செயலர் ஜெகதீஷ் பிரசாத் மீனா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2018-08-18 23:39 GMT

பனைக்குளம்,

மத்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அமைச்சக செயலர் ஜெகதீஷ் பிரசாத் மீனா மண்டபம் யூனியன் சாத்தக்கோன்வலசை கிராமத்தில் தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் வளங்குன்றா கடல்சார் நீருயிரி மற்றும் கடல் மீன் குஞ்சு பொரிப்பகத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் நடராஜனுடன் நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.

இந்த மீன்குஞ்சு பொரிப்பகத்தின் மூலம் கொடுவாய் மீன்கள், செங்குன்னி பாறை, கடல் வண்ண மீன்கள் உட்பட பல்வேறு விதமான மீன் குஞ்சுகள் உற்பத்தி மற்றும் வளர்த்தெடுக்கப்படுவதையும், இந்த ஆய்வகத்தின் செயல்பாடுகள் மற்றும் தொழில்நுட்ப விபரங்களையும் ஆய்வகத்தின் பொறுப்பாளர் ஆனந்த் விளக்கி கூறினார்.

மேலும் இந்த நிலையத்தின் மூலம் மீனவர்களுக்கு மத்திய அரசின் நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கூண்டுகளில் மீன்வளர்த்தலுக்கான 50 சதவீத மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதைதொடர்ந்து மத்திய அரசு செயலர், மாவட்ட கலெக்டர் ஆகியோர் மண்டபத்தில் செயல்பட்டு வரும் பேபி மெரைன் என்ற தனியார் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையின் செயல்பாடுகள் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்தனர். இந்த தொழிற்சாலையின் மூலம் பல்வேறு வகையான கடல் மீன்கள், இறால் ரகங்கள், கணவாய்கள் உரிய முறையில் பதப்படுத்தப்பட்டு சிப்பங்களாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தொழிற்சாலையின் செயல்பாடுகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்த விபரங்களை தொழிற்சாலையின் இயக்குனர் நாயர் விளக்கினார். இந்த ஆய்வின் போது மத்திய உணவுப்பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அமைச்சக பொருளாதார ஆலோசகர் பிஜயகுமார் பெஹரா, மீன்வளத்துறை உதவி இயக்குனர் கோபிநாத், அப்துல்காதர் ஜய்லானி உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்