வீராம்பட்டினத்தில் மீனவர் மீது தாக்குதல்; 9 பேர் மீது வழக்கு

வீராம்பட்டினத்தில் மீனவரை தாக்கியதாக 9 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2018-08-18 23:16 GMT

அரியாங்குப்பம்,

வீராம்பட்டினத்தில் உள்ள பிரசித்திபெற்ற செங்கழுநீர் அம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடந்து வருகிறது. இந்த விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் இழுத்தனர். இந்த திருவிழாவின்போது கோவில் அருகே தற்காலிகமாக கடைகள் அமைத்து வியாபாரம் செய்வது வழக்கம். அவ்வாறு அமைக்கப்படக்கூடிய தற்காலிக கடைகளில் குத்தகைதாரர்கள் அடிகாசு வசூல் செய்வார்கள்.

இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான குத்தகையை வீராம்பட்டினம் சிவாஜி நகர் சுனாமிகுடியிருப்பு பகுதியை சேர்ந்த மீனவர் சத்தியராஜ் (வயது 33) ஏலத்தில் எடுத்து கடைகளில் வசூல் செய்து வந்தார். கடந்த 16–ந் தேதி இரவு 11 மணிக்கு மேல் அடிக்காசு வசூல் செய்த சத்தியராஜ், கடற்கரை பகுதியில் உள்ள கடைகளில் வசூல் செய்ய சென்றதாக தெரிகிறது.

அப்போது அந்த பகுதியில் உள்ள இருட்டான இடத்தில் ஒரு கும்பல் ஒருவரை சுற்றி நின்று சரமாரியாக தாக்கிக் கொண்டிருந்தது. அதனை பார்த்த சத்தியராஜ், “ஏம்பா ஒருத்தரை 5 பேர் தாக்குகிறீர்கள் என்று தட்டிக்கேட்டதாக தெரிகிறது. உடனே அந்த கும்பலை சேர்ந்தவர்கள் சத்தியராஜை மிரட்டி அங்கிருந்து அனுப்பினர்.

அதனைதொடர்ந்து சத்தியராஜ் மீண்டும் குத்தகை காசு வசூல் செய்ய சென்றுவிட்டார். பின்னர் இந்த சம்பவத்தில் கோபம் அடைந்த 5 பேர் கும்பல் மற்றும் அவர்களின் நண்பர்கள் மேலும் 4 பேருடன் சேர்ந்து நள்ளிரவு 1 மணிக்குமேல் மீண்டும் சத்தியராஜிடம் சென்று தகராறு செய்தனர்.

அவரை தரக்குறைவாக திட்டி, அவர்கள் வைத்திருந்த தடி மற்றும் இரும்பு குழாயால் சத்தியராஜை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் அவரை கத்தியால் குத்தவும் முயன்றனர். இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த சத்தியராஜ், அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதாரநிலையத்தில் சிகிச்சை பெற்றார். பின்னர் புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று மேல் சிகிச்சை பெற்றார். அதன்பின்னர் தாக்குதல் குறித்து அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உத்தரவின்பேரில் சப்–இன்ஸ்பெக்டர் இளங்கோ, உதவி சப்–இன்ஸ்பெக்டர் அன்பரசன் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள்.

இந்த விசாரணையில் சத்தியராஜை தாக்கியது வீராம்பட்டினம் பகுதியை சேர்ந்த கிரண்குமார் (23), அமுல்ராஜ் (24), அஜித்குமார் (20), வர்மா (20), விக்கி (21), அறிவழகன் (28), கவி (19), திவாகர் (23), மற்றும் ஸ்டாலின் (20) ஆகியோர் என்பது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து அவர்கள் 9 பேர் மீதும் கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்கள் 9 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்