அண்ணி இறந்ததால் மருத்துவமனையில் பொருட்கள் சூறை: ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி, தம்பியுடன் கைது

தஞ்சை அருகே அண்ணி இறந்ததால் மருத்துவமனையில் பொருட்களை சூறையாடிய ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி, தம்பியுடன் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-08-18 22:15 GMT
தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த மாரியம்மன்கோவில் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மனைவி கவிதா(வயது37). இவருக்கு சிறுநீரக கோளாறு இருந்ததால் கடந்த 14-ந் தேதி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 6-வது வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

முறையான சிகிச்சை அளிக்காததால் தான் கவிதா இறந்துவிட்டதாக உறவினர்கள் ஆத்திரத்துடன் 6-வது வார்டில் இருந்த டாக்டர்கள், செவிலியர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், நாற்காலி, கணினி உள்ளிட்ட பொருட்களை அடித்து சூறையாடினர்.

இதை கண்டித்தும், பணியில் இருக்கும் டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. மேலும் பொது மருத்துவத்துறை உதவி பேராசிரியர் டாக்டர் ரமேஷ், தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவிதாவின் கொழுந்தனார்கள் ஜெயக்குமார்(36), சிவக்குமார்(34) ஆகிய 2 பேரையும் நேற்று கைது செய்தனர். இவர்களில் ஜெயக்குமார், ரஜினி ரசிகர் மன்ற அம்மாப்பேட்டை ஒன்றிய செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்