திருப்பூரில் தையல் தொழிலாளி அடித்துக்கொலை: வடமாநில தொழிலாளியை பிடித்து போலீஸ் விசாரணை

திருப்பூரில் தையல் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வட மாநில தொழிலாளியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-08-18 22:30 GMT

திருப்பூர்,

திருப்பூர் கொடிக்கம்பம் கண்மணி காம்பவுண்டு பகுதியை சேர்ந்தவர் அழகேஷ் (வயது 62). இவர் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி பாக்கியம் (57). இவர்களது வீடு அருகே ஒடிசாவை சேர்ந்த பிஷ்ணுகுமார் (25) என்பவர் தனது மனைவி பூஜா (23), மகன் ரித்திஷ் (4) ஆகியோருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

பிஷ்ணுகுமார் அந்த பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் பிஷ்ணுகுமார் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக தெரிகிறது. தினமும் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பும் அவர் குடித்துவிட்டு மனைவி பூஜாவுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதுபோல் நேற்று இரவும் கணவன்–மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சுமார் ஒரு மணி நேரம் ஆகியும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு தீரவில்லை. எனவே அங்கு சென்ற அழகேஷ், தகராறில் ஈடுபட்டு வந்த பிஷ்ணுகுமாரை தட்டிக்கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த பிஷ்ணுகுமார், அழகேசை கைகளால் சரமாரியாக தாக்கினார். இதில் நிலைகுழைந்த அவர் கீழே விழுந்தார். அப்போது அவருக்கு தலையில் பலத்தகாயம் ஏற்பட்டது.

உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அழகேஷ் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் பிஷ்ணுகுமார் அங்கிருந்து தப்பியோட முயன்றார். உடனே போலீசார் அவரை விரட்டி பிடித்து, போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இது தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவன்–மனைவி இடையே ஏற்பட்ட தகராறை தட்டிக்கேட்க சென்ற தையல் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்