மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 2.05 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு 2.10 லட்சம் கனஅடி நீர் வருகிறது மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 2.05 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு காவிரி ஆற்றில் தொடர்ந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

Update: 2018-08-18 23:00 GMT
மேட்டூர்,

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் கனஅடியாக உள்ளது. அதே நேரத்தில் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 2 லட்சத்து 5 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் தொடர்ந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

கர்நாடகா, கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. அந்த அணைகள் நிரம்பியதால் உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக காவிரியில் வினாடிக்கு 2 லட்சம் கனஅடி வரை தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இந்த தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. தொடர்ந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அங்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 2 லட்சத்து 4 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் தண்ணீர் பேரிரைச்சலுடன் கரைபுரண்டு ஓடுகிறது. ஐந்தருவி தெரியாத அளவிற்கு தொடர்ந்து தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

மேலும் மெயின் அருவி, சினிபால்சில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் சீறிப்பாய்கிறது. தொடர்ந்து மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் பிலிகுண்டுலுவில் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கல்லில் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கர்நாடகாவில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரின் காரணமாக மேட்டூர் அணை கடந்த மாதம் 23-ந் தேதி நிரம்பியது. அதன் பின்னர் தண்ணீர் வரத்து குறைந்ததால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக சரிந்தது. இந்த நிலையில் மீண்டும் தண்ணீர் வரத்து அதிகமானதால் மேட்டூர் அணை தனது முழுகொள்ளளவான 120 அடியை கடந்த 11-ந் தேதி எட்டியது. இந்த ஆண்டில் அணை 2-வது முறையாக நிரம்பியது. தொடர்ந்து கடந்த 8 நாட்களாக முழு கொள்ளளவான 120 அடியாகவே நீடிக்கிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 70 ஆயிரத்து 800 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. நேற்று மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தது. இதன்படி வினாடிக்கு 1 லட்சத்து 83 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்தின் காரணமாக அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு 1 லட்சத்து 95 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நேற்று இரவு 7 மணிக்கு மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 85 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 2 லட்சத்து 5 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

உபரிநீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்று, மேட்டூர் அனல் மின்நிலையம் அருகே காவிரி ஆற்றில் கலந்து பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த பகுதியில் ஆங்காங்கே பாறைகள் நிறைந்துள்ளதால் தண்ணீர் வரும் வேகத்தில் பாறைகள் மீது மோதுவதால் பெரும் அலைகள் போல எழும்புகிறது. இதை பார்ப்பதற்கு கடற்கரையில் அலையடிப்பது போன்று காணப்படுகிறது.

இதன்காரணமாக மேட்டூர் மின் நிலைய சாலை பகுதியில் ஏராளமான பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கூட்டம், கூட்டமாக நின்று தண்ணீர் ஓடும் அழகை ரசித்து செல்கிறார்கள். அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் போலீசார் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுமட்டுமின்றி போலீசார் சார்பில் 5 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 10 போலீசார் கொண்ட மீட்பு குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பேரிடர் மீட்பு குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். தொடர்ந்து கரையோர மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை நீடிக்கிறது.

கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தமிழகத்திற்கு நேற்று வினாடிக்கு 1.90 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்