கேரளாவுக்கு ஒரு கோடி ரூபாய் நிதி உதவி குடகு மாவட்டத்திற்கு ரூ.2.28 கோடி நிவாரணம் பெங்களூரு மாநகராட்சி மேயர் சம்பத்ராஜ் அறிவிப்பு
மழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ஒரு கோடி ரூபாய் நிதி உதவியும், குடகு மாவட்டத்திற்கு ரூ.2.28 கோடியும் நிவாரணமும் வழங்கப்படும்.
பெங்களூரு,
மழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ஒரு கோடி ரூபாய் நிதி உதவியும், குடகு மாவட்டத்திற்கு ரூ.2.28 கோடியும் நிவாரணமும் வழங்கப்படும் என்று பெங்களூரு மாநகராட்சி மேயர் சம்பத்ராஜ் அறிவித்துள்ளார்.
பெங்களூரு மாநகராட்சி மேயர் சம்பத்ராஜ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–
கேரளாவுக்கு ரூ.1 கோடிகனமழை காரணமாக குடகு மாவட்டம் வெள்ளத்தில் மிதக்கிறது. அந்த மாவட்ட மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகளும், அவர்களுக்கு தேவையான உதவிகளையும் அரசு செய்து கொடுத்து வருகிறது. அதுபோல, கேரளாவிலும் கொட்டி தீர்க்கும் மழையால், அந்த மாநிலம் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குடகு, கேரளாவுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க மாநகராட்சி முன்வந்திருப்பதுடன், அதற்கான நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது.
மேலும் குடகு மற்றும் கேரளா மாநிலத்திற்கு மாநகராட்சியின் மருத்துவ குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுதவிர சில அதிகாரிகளும் அங்கு சென்றுள்ளனர். மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள குடகு மாவட்டத்திற்கு ரூ.1 கோடியும், அதுபோல கேரளா மாநிலத்திற்கு ரூ.1 கோடியும் மாநகராட்சி நிதியில் இருந்து நிதி உதவி வழங்கப்படும்.
கவுன்சிலர்களின் மாத சம்பளம்இதுதவிர மாநகராட்சியின் 198 வார்டு கவுன்சிலர்களும் தங்களது ஒரு மாத சம்பளத்தையும், மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் தங்களது ஒரு நாள் சம்பளத்தையும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள குடகு மாவட்டத்திற்கு வழங்க முடிவு செய்துள்ளனர். வார்டு கவுன்சிலர்கள், அதிகாரிகள், ஊழியர்களின் சம்பளம் மூலம் ரூ.1 கோடியே 28 லட்சம் கிடைக்கும். அதனை குடகு மாவட்ட நிவாரணத்திற்காக வழங்கப்படும்.
மாநகராட்சி கவுன்சிலர்கள் ஒவ்வொருவரும் தங்களது வார்டு பகுதிகளில் பாதயாத்திரையாக சென்று மக்களிடம் இருந்து பண உதவி, உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை பெற்று வருகிறார்கள். அதனையும் குடகு மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு மேயர் சம்பத்ராஜ் கூறினார். பேட்டியின் போது துணை மேயர் பத்மாவதி, மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் பத்மநாபரெட்டி ஆகியோர் உடன் இருந்தனர்.