குடகில் மீட்பு பணிகள் தீவிரமாக நடக்கிறது மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்
மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதல்–மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
குடகில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதல்–மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.
குமாரசாமி ஆலோசனைகர்நாடகத்தில் குடகு, தட்சிண கன்னடா, சிக்கமகளூரு, ஹாசன் மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக குடகு, உடுப்பி, தட்சிண கன்னடா மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அந்த மாவட்ட மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகிறார்கள். அவர்களை மீட்கும் பணியில் ராணுவ வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், கர்நாடகத்தில் மழை வெள்ள பாதிப்பு குறித்து குடகு உள்ளிட்ட அந்தந்த மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக முதல்–மந்திரி குமாரசாமி நேற்று ஆலோசனை நடத்தினார்.
மேலும் மீட்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அவர் அறிந்து கொண்டார். மேலும் மழை பாதிப்பு குறித்து பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் அரசு உயர் அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் முதல்–மந்திரி குமாரசாமி தலைமையில் நடந்தது. அப்போது மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள குடகு மாவட்டத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்வது, நிவாரண உதவிகள் வழங்குவது குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி குமாரசாமி விரிவாக ஆலோசித்தார். பின்னர் முதல்–மந்திரி குமாரசாமி நிருபர்களிடம் கூறியதாவது:–
மீட்பு பணிகள் தீவிரம்கர்நாடகத்தில் குடகு, தட்சிண கன்னடா, சிக்கமகளூரு உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால், அங்குள்ள மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவிக்கிறார்கள். குடகு மாவட்டம் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குடகில் வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை மீட்கும் பணியில் ராணுவ வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு படைவீரர்கள், வனத்துறை ஊழியர்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். மீட்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
அதன்படி, மீட்பு பணிகள் 24 மணிநேரமும் இடைவிடாது தீவிரமாக நடைபெற்று வருகிறது. குடகில் மட்டும் 35 இடங்களில் முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 70 முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் கூடுதலாக முகாம்கள் திறக்கப்படும். குடகு மாவட்டத்திற்கு 10 மருத்துவ குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கு தேவையான உணவு பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. மீட்பு பணியில் 50 பொக்லைன் எந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
ரூ.5 லட்சம் நிவாரணம்மாநிலத்தில் பலத்த மழை பெய்துள்ளதால் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன. குடகில் மட்டும் 800–க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இன்னும் ஏராளமான வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. மீட்பு பணிகளை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். குடகில் உள்ள 3000–க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளன. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ள கிராமங்களுக்கு மின்வசதி ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
மழையால் வீடுகளை இழந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். வீடுகளை இழந்தவர்கள் புதிதாக வீடுகள் கட்டிக் கொள்ள தேவையான உதவிகளை அரசு செய்து கொடுக்கும். அதுபோல, மழையால் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். மீட்பு பணிகளை மேற்கொள்வது, நிவாரண உதவிகளை துரிதமாக வழங்க தலைமை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. நிவாரண பணிகளை மேற்கொள்ள ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நிவாரணத்திற்கு தேவையான பண உதவிகளை உடனடியாக வழங்க தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளேன்.
ஆதங்கப்பட வேண்டாம்மழையால் மக்கள் பாதிக்கப்பட்டு இருந்தாலும், யாரும் ஆதங்கப்பட வேண்டாம். மக்களுடன் அரசு இருக்கிறது. மழையால் எந்த அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து மாவட்ட கலெக்டர்களிடம் அறிக்கை கேட்டுள்ளேன். அவர்கள் அறிக்கை அளித்ததும், மழை தேசம் குறித்து மத்திய அரசிடம் நிவாரண உதவி கேட்கப்படும்.
குடகு மாவட்ட மக்கள் தங்களது வீடுகளை இழந்து மிகுந்த சிரமத்தை அனுபவித்து வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க வேண்டும். இதற்கு மாநில மக்கள் உதவி செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.