குடகு மாவட்டத்தை புரட்டிபோட்ட கனமழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் குமாரசாமி ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு

குடகு மாவட்டத்தை கனமழை புரட்டிபோட்டது. இதனால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை முதல்–மந்திரி குமாரசாமி நேற்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2018-08-18 23:30 GMT

குடகு, 

குடகு மாவட்டத்தை கனமழை புரட்டிபோட்டது. இதனால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை முதல்–மந்திரி குமாரசாமி நேற்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மீட்பு பணிகளில் ராணுவத்தினர் உள்பட 5 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர். வீடுகளை இழந்த 3,500 பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

புரட்டிப்போட்ட கனமழை

கர்நாடகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது, குடகு மாவட்டம். இங்கு வனப்பகுதிகளும், மலைக்குன்றுகளும், பச்சை பசேல் என காட்சி தரும் காபி தோட்டங்களும் அதிகளவில் உள்ளன. குடகு மாவட்டம் தலைக்காவிரியில் தான் காவிரி ஆறு பிறக்கிறது. கர்நாடகத்தில் கடந்த மே மாத இறுதியில் இருந்து தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பெய்து வரும் கனமழையால் மலைநாடுகளான குடகு, சிவமொக்கா, சிக்கமகளூரு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை கொட்டி வருகிறது. அதிலும் குடகு மாவட்டத்தை பலத்த மழை புரட்டிப்போட்டது.

குடகு மாவட்டத்தில் உள்ள சோமவார்பேட்டை, மடிகேரி, விராஜ்பேட்டை ஆகிய தாலுகாக்களில் கனமழை இடைவிடாது கொட்டி தீர்த்து வருகிறது. இதன்காரணமாக காவிரி, மடிகேரியில் ஓடும் அட்டிஓலே, விராஜ்பேட்டையில் ஓடும் லட்சுமணதீர்த்த ஆறுகளிலும் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த வெள்ளப்பெருக்கால், பல்வேறு கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. அங்கு வசித்து வந்த மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

மண்சரிவு

குடகு மாவட்டத்தில் மலை அடிவாரத்தில் உள்ள கிராமங்கள் தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதாவது, முக்கொட்லு, காட்டக்கேரி, ஆலேறி, மக்கந்தூர் ஆகிய கிராமங்கள் பயங்கர மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மரம், செடி, கொடிகள், பாறாங்கற்கள், மண் ஆகியவை குடியிருப்புகளில் விழுந்துள்ளன. இதில், 100–க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக அந்தப் பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்கள் வெளியேறி அருகில் இருந்த மலைப்பகுதியில் தங்கியுள்ளனர்.

இதில் குறிப்பாக மக்கந்தூர் பகுதியில் பெரிய அளவில் மண்சரிவு ஏற்பட்டு, மழை நீரும் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால் அங்கு வசித்து வந்த 200–க்கும் மேற்பட்ட மக்கள் மேடான பகுதியில் தங்கியுள்ளனர். வீடுகளை இழந்து உணவு, தண்ணீர் இன்றி அவர்கள் பரிதவித்து வருகிறார்கள். ஆலேறி கிராமத்தில் மண்சரிவு ஏற்பட்டு குடியிருப்புகள் மீது விழுந்தன. மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இருந்த மக்கள் ஏராளமானோர் மாயமாகி உள்ளதாக தெரிகிறது. அவர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் 6 பேர் சாவு

இடைவிடாது காற்றுடன் பெய்து வரும் பேய் மழையால் விராஜ்பேட்டை, சோமவார்பேட்டை, மடிகேரி தாலுகாக்களில் 20–க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. மேலும் 50–க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்களும் முறிந்து விழுந்துள்ளன. இதனால் அந்த கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியுள்ளன. தொடர் மழையால் குசால் நகர், மடிகேரி, நாபொக்லு உள்ளிட்ட நகரப் பகுதிகளில் வெள்ள நீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. இதனால் அந்தப் பகுதிகளில் வசித்து வந்த மக்கள் வெளியேற்றப்பட்டு பள்ளிக்கூடம், திருமண மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

குடகு மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவால் ஏற்கனவே குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் ஜோடுபாலா பகுதியில் நேற்று முன்தினம் 6 பேர் மழைவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அவர்கள் 6 பேரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் கருதுகிறார்கள். அவர்களில் 2 பேரின் உடல்களை தீயணைப்பு படையினர் மீட்டனர். மற்ற 4 பேரின் உடல்களை மீட்க முடியவில்லை. அவர்களின் உடல்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் சாவின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

போக்குவரத்து துண்டிப்பு

தொடர் கனமழையால் மடிகேரி–மங்களூரு தேசிய நெடுஞ்சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளது. அத்துடன் 15–க்கும் அதிகமான இடங்களில் சாலைகளில் அரிப்பு ஏற்பட்டு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 6 நாட்களாக அந்த சாலையில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. மேலும் மடிகேரி–சம்பாஜே ரோடு, மடிகேரி–மாதாபுரா ரோடு, குசால் நகர்–ஹாசன் ரோடு, விராஜ்பேட்டை–வயநாடு ரோடு, விராஜ்பேட்டை–மடிகேரி ரோடு, விராஜ்பேட்டை–கோணிகொப்பா ரோடு ஆகிய நகரின் முக்கிய சாலைகளில் மண்சரிவு ஏற்பட்டதுடன், மண்அரிப்பும் உண்டாகியுள்ளது.

இதனால் இந்த சாலைகளில் 4–வது நாளாக நேற்றும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சம்பாஜே, மக்கந்தூர், ஜோடுபாலா பகுதியில் மணலுடன் சேர்ந்து செந்நிறத்தில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், மேலும் மண்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மங்களூரு–மடிகேரி இடையே போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

மீட்பு பணிகள் தீவிரம்

சம்பாஜே, ஆலேறி, காட்டக்கேரி, முக்கொட்லு உள்ளிட்ட பகுதிகளில் பெரிய அளவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. சம்பாஜே பகுதியில் நிலங்களில் விரிசலும் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு மேடான பகுதிகளில் சிக்கி தவித்து வருகிறார்கள். இதனால் குடகு மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவம், மங்களூரு, கார்வார் பகுதிகளில் இருந்து கடலோர காவல்படையினர், மாநில மீட்பு குழுவினர், நீச்சல் வீரர்கள், தீயணைப்பு படையினர், பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய் துறையினர், மின்வாரிய அதிகாரிகள் என 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். மீட்பு குழுவினர் சாலைகளில் முறிந்து விழுந்த மரங்களையும் வெட்டி அகற்றுகிறார்கள். மண்சரிவு ஏற்பட்ட பகுதியிலும் பொக்லைன் உதவியுடன் சீரமைப்பு பணி மேற்கொண்டு வருகிறார்கள். அத்துடன் சேதமடைந்த மின்கம்பங்களை சரி செய்து மின்சார இணைப்பு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். முக்கொட்லு பகுதியில் சிக்கியவர்களை ராணுவத்தினர் மீட்க சென்றனர். அப்போது அங்கு மண்சரிவு ஏற்பட்டதால், அவர்கள் மீட்பு பணியை கைவிட்டு அங்கிருந்து திரும்பி சென்றனர்.

3,500 பேர் மீட்பு

இந்த நிலையில், நேற்று குடகு மாவட்டத்தில் ஆபத்தான பகுதியில் சிக்கி தவித்த சுமார் 3,500 பேரை ராணுவத்தினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர். மேலும், ஆலேறி, காட்டக்கேரி, முக்கொட்லு பகுதிகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. மேடான பகுதியில் இருந்தவர்களை ராணுவத்தினர், கயிறு கட்டியும், செயற்கை பாலம் அமைத்தும் பத்திரமாக மீட்டனர். ஆற்றில் வெள்ளம் சென்றாலும் ராணுவத்தினர் அச்சப்படாமல் ஒரு புறத்தில் இருந்தவர்களை கயிறு கட்டி மறு புறத்திற்கு பத்திரமாக கொண்டு வந்தனர். வயதானவர்கள், குழந்தைகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை ராணுவ வீரர்கள், தீயணைப்பு படையினர் ரப்பர் படகுகள் மூலம் மீட்டனர். அங்கு மீட்கப்பட்ட 3,500 பேரும் பள்ளி, கோவில், மசூதி, சமுதாய பவனம், ஓட்டல் என 35 முகாம்களில் தஞ்சமடைந்து உள்ளனர். அங்கு அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அந்த முகாம்களில் தஞ்சமடைந்தவர்களுக்கு தேவையான உணவு பொருட்கள், உடைகள், மருந்து பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. குடகு மாவட்டத்தில் ஓடும் ஆற்றங்கரையோரத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பான பகுதிக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

குமாரசாமி பார்வையிட்டார்

இந்த நிலையில் நேற்று முதல்–மந்திரி குமாரசாமி ஹெலிகாப்டர் மூலம் குடகு மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவர் மடிகேரி, குசால்நகர், சோமவார்பேட்டை ஆகிய பகுதிகளை ஹெலிகாப்டரில் இருந்தவாரே ஆய்வு செய்தார். இதையடுத்து அவர் மடிகேரியில் அதிகாரிகளின் கூட்டத்தை நடத்தி, மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

முன்னதாக, மத்திய மந்திரி சதானந்தகவுடாவும் நேற்று இக்கொட்லு பகுதியில் சென்று மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். மேலும் அவர் மக்களிடம் குறைகளை கேட்டறிந்து கொண்டார்.

குடகு மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 50–க்கும் மேற்பட்ட பொக்லைன் எந்திரங்கள் மூலம் மீட்பு பணிகள் நடந்து வருகிறது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மழை நின்ற பின்னர் முழுவீச்சில் மீட்பு பணிகள் தொடங்கும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குடகு மாவட்டத்தை புரட்டி போட்டுள்ள இந்த மழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடந்த 6 நாட்களாக முடங்கிபோய் உள்ளது.

மேலும் செய்திகள்