கிணற்றில் விழுந்த பெண் உயிருடன் மீட்பு

திருவண்ணாமலை அருகே கிணற்றில் விழுந்த பெண் உயிருடன் மீட்டனர்.

Update: 2018-08-18 22:00 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருகே செங்கம் சாலை ஒட்டக்குடிசல் பகுதியை சேர்ந்தவர் ஜெயராம். இவருடைய மனைவி பாக்கியம் (வயது 42). இவர் நேற்று பகல் சுமார் 11 மணி அளவில் அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்துக்கு சென்றார். அப்போது திடீரென அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்ட பொதுமக்கள் ஓடிச் சென்று கிணற்றுக்குள் பார்த்தனர்.

கிணற்றில் உள்ள தண்ணீரில் பாக்கியம் தத்தளித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். பொதுமக்கள் அவரை மீட்க முயன்றனர். எனினும் அவர்களால் முடியவில்லை. இதையடுத்து பொதுமக்கள் திருவண்ணாமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் அலெக்ஸ்சாண்டர் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்றனர். கிணற்றுக்குள் வீரர்கள் குதித்து கயிறு கட்டி பாக்கியத்தை உயிருடன் மீட்டனர். தீயணைப்பு வீரர்களுக்கு பாக்கியம் மற்றும் பொதுமக்கள் நன்றி கூறினர்.

மேலும் செய்திகள்