நீலகிரி மாவட்டம் தோற்றுவிக்கப்பட்டு 150–வது ஆண்டு நிறைவையொட்டி கேக் வெட்டி கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம் தோற்றுவிக்கப்பட்டு 150–வது ஆண்டு நிறைவையொட்டி கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. சுற்றுலா பயணிகளுக்கு நீலகிரியின் பெருமைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

Update: 2018-08-18 22:45 GMT

ஊட்டி,

கடந்த 1868–ம் ஆண்டு ஆகஸ்ட் 18–ந் தேதி கோவை மாவட்டத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டு 150 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி நீலகிரி ஆவணக்காப்பகம் சார்பில், நீலகிரி மாவட்டம் தோற்றுவிக்கப்பட்டு 150–வது ஆண்டு நிகழ்ச்சி ஊட்டி அரசு கலைக்கல்லூரி அருகே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கல் பங்களாவில் (தற்போதைய அரசு அருங்காட்சியகம்) நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆவணக்காப்பக இயக்குனர் வேணுகோபால் தலைமை தாங்கினார். அருங்காட்சியக காப்பாட்சியர் முருகவேல் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் சுற்றுலா பயணிகளுடன் இணைந்து 150 ஆண்டை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. பின்னர் சுற்றுலா பயணிகளுக்கு நீலகிரி தோன்றிய விதம், சிறப்புகள், பெருமைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது. அதனை தொடர்ந்து நீலகிரி ஆவணக்காப்பக இயக்குனர் வேணுகோபால் பேசியதாவது:–

கடந்த 1868–ம் ஆண்டு கோவையில் இருந்து நீலகிரி பிரிந்து தனி மாவட்டமாக உருவானது. அப்போது இந்த மாவட்டத்துக்கு முதல் ஆணையாளராக பிரிக்ஸ் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார். அவர் கடந்த 1869–ம் ஆண்டு முதல் கோடைகாலத்தில் ஊட்டியை தலைமையிடமாக கொண்டு சென்னை மாகாண ஆங்கிலேய அரசு செயல்பட முயற்சி எடுத்தார். 1870–ம் ஆண்டு ஊட்டியில் தலைமையிடம் செயல்பட தொடங்கியது. அப்போது சென்னை மாகாண கவர்னர் நேப்பியார் ஊட்டியில் முகாமிட்டு இருந்தார்.

1937–ம் ஆண்டு அன்றைய சென்னை மாகாண முதல்வர் ராஜகோபால் ஆச்சாரி (ராஜாஜி) பொறுப்பேற்ற உடன் ஊட்டியில் தலைமையிடம் செயல்படுவது நிறுத்தம் செய்யப்பட்டது. நீலகிரியின் முதல் ஆணையாளர் பிரிக்ஸ் எடுத்த நடவடிக்கையால் 1871–ம் ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினர்களான கோத்தர், தோடர், படுகர், இருளர், குரும்பர் உள்ளிட்ட ஆதிவாசி மக்களின் கல்லறைகளில் இருந்து அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் கண்டு எடுக்கப்பட்டது. இந்த பொருட்கள் மூலம் பழங்குடியினர்களின் வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள் குறித்து தெரிந்துகொள்ள முடிந்தது. பிரிக்ஸ் பழங்குடியினர் குறித்து எழுதிய புத்தகம் ஊட்டி அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற பொருட்கள் இங்கிலாந்து நாட்டில் லண்டன் அருங்காட்சியகம், கல்கத்தாவில் உள்ள இந்தியாவின் விக்டோரியா அருங்காட்சியகம், சென்னை அருங்காட்சியகம் மற்றும் ஊட்டி அரசு அருங்காட்சியகத்தில் சில பொருட்களும் வைக்கப்பட்டு உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு மூடியுடன் பயன்படுத்தப்பட்ட மண் குடுவை கண்டறியப்பட்டது. அந்த மூடியில் எருமையின் உருவம் பதிக்கப்பட்டு இருந்தது. நீலகிரி மாவட்டத்தின் பழங்கால பெருமைகளை சுற்றுலா பயணிகள், ஆராய்ச்சியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் எளிமையாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்