தூத்துக்குடியில் இருந்து கேரள மக்களுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

தூத்துக்குடியில் இருந்து கேரள மக்களுக்கு ரூ.50 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

Update: 2018-08-18 21:30 GMT

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் இருந்து கேரள மக்களுக்கு ரூ.50 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் தூத்துக்குடியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது;–

3 லாரிகள்

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி மூலம், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவிடும் பொருட்கள், பொது மக்களின் பங்களிப்புடன் பெற்று அனுப்பப்படும் வகையில், தூத்துக்குடி மாநகராட்சி, மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருச்செந்தூர், கோவில்பட்டி ஆகிய 4 இடங்களில் பொருட்கள் பெற்று கொள்ளும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் பொருட்களை கொடுக்கலாம். பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட போர்வைகள், குடிநீர் பாட்டில்கள், அரிசி, பிஸ்கட் வகைகள், மெழுகுவர்த்திகள், கைலிகள், நைட்டிகள், துண்டு, சோப்பு, உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் 3 லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெறப்படும் பொருட்கள் தினசரி 2 அல்லது 3 லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படும். மேலும், மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் தேவை என்பதால் ஆக்சிஜன் சிலிண்டர்களும் பெற்று அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

ரூ.50 லட்சம்

லாரிகள் மூலம் முதற்கட்டமாக 5 ஆயிரத்து 925 கிலோ அரிசி, 6 ஆயிரத்து 540 லிட்டர் குடிநீர் பாட்டில்கள், 12 ஆயிரம் தீப்பெட்டிகள், 25 ஆயிரம் மெழுகுவர்த்திகள், 1,200 கொசு விரட்டிகள், 2 ஆயிரத்து 366 உப்பு சர்க்கரை கரைசல் பாக்கெட்டுகள், 345 போர்வைகள், 4 ஆயிரம் குளியல் சோப்பு, துணி துவைக்கும் சோப்புகள், 288 பால் பவுடர் பாக்கெட்டுகள், 2 ஆயிரம் டீ தூள் பாக்கெட்டுகள் உள்ளிட்ட பல்வேறு நிவாரண பொருட்கள் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

சாகுபுரம்

கேரள மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், ஆறுமுகநேரியை அடுத்த சாகுபுரம் டி.சி.டபிள்யு. தொழிற்சாலை சார்பில், தண்ணீரை சுத்திகரிக்கும் கிருமி நாசினியான சோடியம் ஹைபோ ரசாயனம் 10 மெட்ரிக் டன் மற்றும் 1,000 போர்வைகள் தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி கோவில்பட்டி நகர குழு சார்பில், ரூ.10 லட்சம் மதிப்பிலான ஆயத்த ஆடைகளை உள்ளூர் கடைகளில் சேகரித்து, லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

மாவட்ட செயலாளர் அழகுமுத்து பாண்டியன், நகர செயலாளர் சரோஜா, துணை செயலாளர் முனியசாமி, தாலுகா செயலாளர் பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்