வந்தவாசி அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து பெண் சாவு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலைமறியல்

வந்தவாசி அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து பெண் பரிதாபமாக இறந்தார். 20பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கவில்லை என கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-08-18 01:29 GMT
வந்தவாசி,

வந்தவாசி தாலுகா அதியங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவருடைய 8 மாத குழந்தை உடல்நலக்குறைவால் இறந்தது. அதைத்தொடர்ந்து துக்க நிகழ்ச்சிக்கு நேற்று துணையம்பட்டு கிராமத்தில் இருந்து உறவினர்கள் 30 பேர் சரக்கு ஆட்டோவில் புறப்பட்டு சென்றனர்.

சரக்கு ஆட்டோவை துணையம்பட்டு கிராமத்தை சேர்ந்த வேலு என்பவர் ஓட்டிச்சென்றார், புன்னை கிராமம் அருகே சென்றபோது திடீரென சரக்கு ஆட்டோ சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் துணையம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பார்வதி (வயது 55) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மேலும் சரக்கு ஆட்டோவில் பயணம் செய்த தவச்செல்வி (34), வரதம்மாள் (50), ராணி (45), காஞ்சனா (35), வசந்தி (38), சாமுண்டீஸ்வரி (60), செல்லம்மாள் (60), பத்மாவதி (57), சரளா, பொன்னம்மாள், ஜோதி, செல்வி உள்பட 20 பேர் காயம் அடைந்தனர்.

காயம் அடைந்த அனைவரும் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லாததால் உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை எனக்கூறி உறவினர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வந்தவாசி தொகுதி செயலாளர் மேத்தாரமேஷ், நகர நிர்வாகிகள் விநாயகம், ஏழுமலை, ஒன்றிய பொறுப்பாளர் ரஞ்சித் உள்பட பலர் மருத்துவமனையின் முன்பு பகல் 1 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வந்தவாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பொற்செழியன், தாசில்தார் முரளிதரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று சாலைமறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

சாலைமறியல் காரணமாக வந்தவாசி- மேல்மருவத்தூர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்