தஞ்சை பெரிய கோவில்: லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான 3 சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்

தஞ்சை பெரிய கோவிலில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான 3 சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது. பழைய குற்றவாளிகளின் கைவரிசையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-08-18 00:00 GMT
தஞ்சாவூர்,

மாமன்னன் ராஜராஜ சோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தஞ்சை பெரியகோவில் தற்போது மத்திய அரசின் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த கோவிலை சுற்றிலும் பெரிய கோட்டைச்சுவர், சின்னக்கோட்டைச்சுவர் உள்ளது. பெரிய கோவில் பின்புறம் தென்னை மரங்கள், சந்தன மரங்கள் உள்பட பல்வேறு மரங்கள் உள்ளன. சந்தன மரங்களை சுற்றிலும் இரும்பினால் ஆன முள் கம்பிகள் கட்டப்பட்டுள்ளன. 30 ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட 3 சந்தன மரங்கள் நன்கு வளர்ந்து நின்றன.

இந்த 3 சந்தன மரங்களையும் மர்ம நபர்கள் சிலர், ரம்பத்தின் உதவியால் வெட்டி கடத்தியுள்ளனர். இதை அறிந்த தொல்லியல்துறை அதிகாரிகளும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் இது குறித்து தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ஜெயச்சந்திரன், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் பெரிய கோவிலுக்கு வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

சந்தன மரங்களை வெட்டியவர்கள், மரத்தில் இருந்த கிளைகளை எல்லாம் வெட்டி விட்டு பெரிய கட்டைகளை மட்டும் கடத்தி சென்றுள்ளனர். பெரிய கோவிலில் 30-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் பெரும்பாலான கண்காணிப்பு கேமராக்கள் செயல்படவில்லை. இதனால் மரங்களை வெட்டி கடத்திய மர்ம நபர்களின் உருவப்படம் எதுவும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகவில்லை. இதனால் பெரியகோவில் வளாகத்திற்கு மர்ம நபர்கள் எப்படி வந்தார்கள்? சந்தன மரங்களை வெட்டி எந்த வழியாக கடத்தி சென்றார்கள்? என்று தெரியவில்லை.

பெரிய கோவிலை சுற்றிலும் அகழி உள்ளது. இந்த அகழி வழியாக மர்ம நபர்கள் வந்து, பெரிய கோட்டைச் சுவரில் ஏறி பெரிய கோவில் வளாகத்திற்குள் சென்று இருக்கலாம் என்றும், சந்தன மரங்களை வெட்டி கோவிலின் பின்புறமுள்ள மண் மேடு வழியாக கட்டைகளை பெரிய கோட்டைச்சுவருக்கு கொண்டு வந்து மீண்டும் அகழி வழியாக தப்பி சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர்.

பெரிய கோவில் கும்பாபிஷேகத்திற்காக கோபுரங்களை தூய்மை செய்தல், புல் தரை அமைத்தல், புதிய செங்கற்கள் பதித்தல் போன்ற ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணியில் ஈடுபடும் தொழிலாளர்களிடம் இந்த கடத்தல் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

கடந்த 2007-ம் ஆண்டு இதேபோல் பெரிய கோவில் வளாகத்தில் இருந்த ஒரு சந்தன மரத்தை வெட்டி மர்ம நபர்கள் கடத்தினர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். எனவே பழைய குற்றவாளிகளே இந்த 3 சந்தன மரங் களையும் வெட்டி கடத்தினார்களா? என்ற கோணத்திலும் தஞ்சை மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தப்பட்ட சந்தன மரங்களின் மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

தஞ்சை பெரிய கோவிலில் பாதுகாப்பு குறைபாடா?

தஞ்சை பெரிய கோவிலில் பகலில் மட்டுமின்றி இரவு நேரத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி இருந்தும் அங்கு இருந்த 3 சந்தன மரங்களை வெட்டி கடத்தியுள்ளது பெரிய கோவில் பாதுகாப்பில் குறைபாடு இருக்கிறதோ? என சந்தேகம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. பெரிய கோவிலில் இருந்து திருடிச் செல்லப்பட்ட ஐம்பொன்னால் ஆன ராஜராஜன் சிலை, லோகமாதேவி சிலைகளை குஜராத்தில் இருந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டு வந்து பெரிய கோவிலில் வைத்துள்ளனர்.

இதேபோல பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலைகளும் அங்கு உள்ளன. இதனால் பெரிய கோவிலில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதுடன் அனைத்து கண்காணிப்பு கேமராக்களும் சரியாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த உரிய முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்