சக்லேஷ்புரா-சுப்பிரமணியா இடையே 42 இடங்களில் மண்சரிவு எடகுமரி ரெயில் நிலையத்தில் சிக்கியிருந்த 16 ஊழியர்கள் பத்திரமாக மீட்பு

சக்லேஷ்புரா-சுப்பிரமணியா இடையே 42 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் எடகுமரி ரெயில் நிலையத்தில் சிக்கி தவித்த 16 ஊழியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Update: 2018-08-18 00:00 GMT
ஹாசன், 

சக்லேஷ்புரா-சுப்பிரமணியா இடையே 42 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் எடகுமரி ரெயில் நிலையத்தில் சிக்கி தவித்த 16 ஊழியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ஹேமாவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

ஹாசன் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் சக்லேஷ்புரா, அரக்கல்கோடு, அரிசிகெரே தாலுகாக்களில் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. ஹேமாவதி அணை நிரம்பி, அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், ஹேமாவதி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஹேமாவதி ஆற்றங்கரையோரத்தில் இருக்கும் கடுவினஒசஹள்ளி, ராமநாதபுரா, பானகுந்தி, மாதாபுரா, கொப்பள்ளி, கட்டேபுரா, கொனனூர், மல்லிநாதபுரா, கேரளபுரா, பசவனஹள்ளி, பெட்டசோகே, பட்டபசவபட்டணா கிராமங்களில் தண்ணீர் புகுந்தது. மேலும், அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல் வயல்களிலும் தண்ணீர் புகுந்தது. இதனால் நெல் பயிர்கள் நாசமாகின. இதன்காரணமாக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கலெக்டர் ஆய்வு

ராமநாதபுரா கிராமத்தின் பகுதியில் தான் ஹேமாவதி ஆறு, காவிரி ஆற்றில் கலக்கிறது. இதனால் காவிரி ஆற்றில் அதிகமாக தண்ணீர் செல்வதால், ராமநாதபுரா கிராமத்தில் ஆற்றங்கரையையொட்டி அமைந்துள்ள லட்சுமணேஸ்வரா கோவில் முழுமையாக மூழ்கி உள்ளது. ஹேமாவதி, காவிரி ஆறுகளில் கரையோரத்தில் வசித்த மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர். மழையால் பாதிக்கப்பட்ட ராமநாதபுரா கிராமத்தில் நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் ரோகிணி சிந்தூரி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் அகரே கிராமத்தில் 2 வீடுகள் இடிந்து விழுந்தன. அதிர்ஷ்டவசமாக வீட்டுக்குள் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்ததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. வீட்டில் இருந்த பொருட்கள் நாசமாகின. இதுபற்றி அறிந்ததும் வருவாய் துறை அதிகாரிகள் அகரே கிராமத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். மேலும் தக்க நிவாரணம் தருவதாக அவர்கள் உறுதி அளித்தனர்.

கலெக்டருக்கு கடிதம்

பெங்களூரு-மங்களூரு இடையே சக்லேஷ்புரா வழியாக தான் ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் சக்லேஷ்புரா தாலுகா வனப்பகுதியில் அமைந்துள்ள எடகுமரி ரெயில் நிலையம் அருகே மண்சரிவு ஏற்பட்டுள்ளதால், கடந்த 14-ந்தேதியில் இருந்து அந்த வழியில் ரெயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. சக்லேஷ்புரா-சுப்பிரமணியா வரையிலான 55 கிலோ மீட்டர் தூரத்தில் 42 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் மண்சரிவு ஏற்படும் ஆபத்தான நிலை உள்ளது. எடகுமரி ரெயில் நிலையத்தில் இருந்து இருபுறங்களிலும் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால், அந்த ரெயில் நிலையத்தில் பணியாற்றி வரும் 16 ஊழியர்கள் அங்கு சிக்கியிருந்தனர்.

எடகுமரி ரெயில் நிலைய கட்டிடமும் ஆபத்தான நிலையில் தான் உள்ளது. இதனால் 16 பேரும் ஆபத்தான நிலையில் சிக்கி தவித்து வந்தனர். அவர்களை மீட்க ரெயில்வே அதிகாரிகளும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்தனர். இந்த நிலையில், எடகுமரி ரெயில் நிலையத்தில் சிக்கி தவிக்கும் 16 ஊழியர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரெயில்வே அதிகாரி ஏ.கே.சின்னா, மைசூரு மாவட்ட கலெக்டர் ரோகிணி சிந்தூரிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

பத்திரமாக மீட்பு

இந்த நிலையில் எடகுமரி ரெயில் நிலையத்தில் சிக்கியுள்ள 16 ரெயில்வே ஊழியர்களையும் பத்திரமாக மீட்க போலீஸ் சூப்பிரண்டு ராகுல்குமார் உத்தரவின்பேரில் மலையேற்ற பயிற்சி பெற்ற 5 குழுவினர் எடகுமரிக்கு சென்றுள்ளனர். அந்த குழுவினர், ரெயில்வே ஊழியர்களை மீட்க தீவிர முயற்சி மேற்கொண்டனர். இந்த நிலையில் நீண்ட நேர போராட்டத்துக்கு பின்னர் 16 பேரையும் போலீசார் பத்திரமாக மீட்டு சக்லேஷ்புராவுக்கு அழைத்து வந்தனர்.

மேலும் செய்திகள்