குடும்பத் தகராறில் பெண் சாவு ; மர்மம் இருப்பதாக பெற்றோர் புகார்
மதுரை சிலைமான் அருகே குடும்பத் தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவில் மர்மம் இருப்பதாக பெண்ணின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
மதுரை,
மதுரை சிலைமான் அருகே உள்ள பனையூர் முனியாண்டி கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரவணன். இவருடைய மனைவி அபிராமி (வயது 30). இவர் தேனி மாவட்டம், சின்னமங்கலத்தை சேர்ந்தவர். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அபிராமி, தனது கணவரிடம் கோபித்து கொண்டு சின்னமங்கலத்தில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சரவணனின் தயார் இறந்து விட்டார். இதனைத் தொடர்ந்து அபிராமி துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக கணவர் வீட்டுக்கு வந்தார். அப்போது அபிராமிக்கும், சரவணனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த அபிராமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அபிராமியின் பெற்றோர் சிலைமான் போலீசில் ஒரு புகார் அளித்தனர். அதில், தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.