நகை பட்டறை அதிபர் வீட்டில் 25 பவுன் கொள்ளை

விருதுநகரில் நகை பட்டறை அதிபர் வீட்டில் 25 பவுன் நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Update: 2018-08-17 22:22 GMT
விருதுநகர், 


விருதுநகர் கே.ஆர்.கார்டன் பகுதியில் வசிப்பவர் அருணாச்சலம்(வயது 48). இவர் விருதுநகர் தெப்பம் பஜாரில் நகை பட்டறை வைத்துள்ளார். இவரது மகன் மாரிக்கனி கோயம்புத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அருணாச்சலமும், அவரது மனைவியும் மாரிக்கனியை கோயம்புத்தூரில் உள்ள கல்லூரியில் விடுவதற்காக சென்று விட்டனர். இவரது 2-வது மகன் சண்முகராஜ்(16) பிளஸ்-1 படித்து வருகிறார். இவர் பள்ளி முடிந்ததும் நேற்று முன்தினம் இரவு முத்து தெருவில் உள்ள அவரது சித்தப்பா சந்தனகுமார் வீட்டிற்கு சென்று தங்கி விட்டார். சண்முகராஜிடம் வீட்டின் சாவி இருந்துள்ளது.

இந்தநிலையில் அருணாச்சலம் நேற்று அதிகாலை கோவையில் இருந்து ஊர் திரும்பினார். வீட்டிற்கு சென்று கதவை திறந்தபோது நடுஅறையின் கதவு திறந்து இருந்தது. வீட்டின் பீரோ கதவும் திறந்து கிடந்தது. பீரோவில் இருந்த ரூ.20 ஆயிரமும், 25 பவுன் நகையும் கொள்ளை போய் இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அருணாச்சலம் விருதுநகர் மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தினர்.


வெளிகதவு ஏதும் உடைக்கப்படாத நிலையில் நடுகதவு மட்டும் திறந்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது புரியாத புதிராகவே இருக்கிறது. போலீசார் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் வீட்டை சுற்றி வந்து விட்டு வீட்டு முன்பு கூடியிருந்த உறவினர்கள் அருகில் படுத்துவிட்டது. போலீசார் பூட்டிய வீட்டில் கதவு உடைக்கப்படாமல் நகை கொள்ளையடிக்கப்பட்டது எவ்வாறு என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். 

மேலும் செய்திகள்