முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணம்: கோவையில் கடைகள் அடைப்பு
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மரணம் அடைந்தார். இதையொட்டி கோவையில் கடைகள் அடைக்கப்பட்டன. 4 பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
கோவை,
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவரது மறைவையொட்டி தமிழக அரசு நேற்று விடுமுறை அறிவித்தது. இதனால் மாநில அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் செயல்பட வில்லை. மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரைநாள் விடுமுறை விடப்பட்டது. ஆனால் தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகள் அனைத்தும் நேற்று வழக்கம் போல செயல்பட்டன. தனியார் அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் இயங்கின. அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம் போல ஓடின.
வாஜ்பாய் மறைவைதொடர்ந்து நேற்று முன்தினம் இரவு கவுண்டம்பாளையம், துடியலூர், ரத்தினபுரி உள்பட பல்வேறு பகுதிகளில் கடைகளை அடைக்குமாறு சிலர் கூறினார்கள். அதன்பேரில் அந்த பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. அது போல் நேற்று காலையும் டவுன்ஹால் ரங்கே கவுடர் பகுதிகளில் சிலர் கடைகளை அடைக்குமாறு கூறினார்கள்.
இதனால் வியாபாரிகள் கடைகளை அடைத்தனர். ஆர்.எஸ்.புரம், மில் ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, கடலைக்கார சந்து உள்பட வடஇந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. இது தவிர கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு, சாய்பாபா காலனி, சிங்காநல்லூர், பீளமேடு, ஒப்பணக்காரவீதி, ராஜவீதி, பெரியகடை வீதி உள்பட கோவையின் அனைத்து பகுதிகளில் உள்ள 95 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஒரு சில ஓட்டல்கள், பேக்கரிகள் மட்டும் திறந்திருந்தன.
இந்த நிலையில் நேற்று காலை 11 மணியளவில் காந்திபுரத்தில் இருந்து சித்ராவுக்கு ஒரு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் பாப்பநாயக்கன்பாளையம் பாரதியார் ரோட்டில் ஒரு தனியார் பள்ளி நிறுத்தம் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அந்த பஸ் மீது கற்களை வீசினார்கள். உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தினார். இதையடுத்து மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இறங்கி வந்த 2 பேர் பஸ்சின் முன்பக்க கண்ணாடியை இரும்பு கம்பிகளால் அடித்து உடைத்தனர்.
அப்போது ஒண்டிப்புதூரில் இருந்து மணியகாரன்பாளையத்துக்கு சென்ற மற்றொரு தனியார் பஸ் அங்கு வந்தது. உடனே மர்ம நபர்கள் 2 பேரும் அந்த பஸ்சின் முன் பக்க கண்ணாடி மீது கல் வீசினார்கள். பஸ் நின்றதும் முன்பக்க மற்றும் பக்கவாட்டு கண்ணாடிகளை இரும்பு கம்பிகளால் அடித்து உடைத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தனியார் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் பயணிகள் செய்வதறியாது திகைத்தனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். கண்ணாடி உடைக்கப்பட்ட 2 பஸ்களும் போலீஸ் பயிற்சி பள்ளிக்கு கொண்டு சென்று நிறுத்தப்பட்டன.
அதன்பின்னர் பகல் 12 மணியளவில் கோவை பீளமேடு தனியார் என்ஜினீயரிங் கல்லூரி நிறுத்தத்தில் 13 பி தடத்தில் செல்லும் ஒரு தனியார் பஸ் வந்து நின்றது. சாய்பாபாகாலனியில் இருந்து சிங்காநல்லூர் செல்லும் அந்த பஸ்சில் இருந்து பயணிகள் இறங்கினார்கள். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் இறங்கி அந்த பஸ்சின் முன்பக்க மற்றும் பக்கவாட்டு கண்ணடிகளை இரும்பு கம்பிகளால் அடித்து உடைத்தனர். இதில் கண்ணாடிகள் உடைந்து சிதறின. பின்னர் மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்று விட்டனர்.
பட்டப்பகலில் 3 தனியார் பஸ்களின் கண்ணாடிகளை மர்ம நபர்கள் உடைத்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனியார் பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது குறித்து ரேஸ்கோர்ஸ் மற்றும் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
சம்பவம் நடந்த 2 இடங்களின் அருகில் உள்ள கட்டிடங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமாரக்களிலும் பஸ் கண்ணாடிகளை உடைத்த ஆசாமிகளின் உருவங்கள் பதிவாகி உள்ளன. அதை வைத்து மர்ம நபர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
கோவை காந்திபுரத்தில் இருந்து ஆலாந்துறைக்கு நேற்றுக்காலை ஒரு அரசு பஸ் சென்றது. அந்த பஸ் போளுவாம்பட்டி பகுதியில் சென்ற போது அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் பஸ் மீது கல் வீசினார்கள். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இதுகுறித்து ஆலாந்துறை போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவைதொடர்ந்து கோவை மாநகரில் 3 தனியார் பஸ்கள் மற்றும் புறநகர் பகுதியில் ஒரு அரசு பஸ் எனவே 4 பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கண்ணாடிகள் உடைக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து கோவை மாநகரில் தனியார் டவுன் பஸ்கள் மதியம் 1 மணி முதல் நிறுத்தப்பட்டன. அரசு டவுன் பஸ்கள் மட்டும் தொடர்ந்து இயக்கப்பட்டன. ஆனால் அவற்றில் பயணிகள் குறைந்த எண்ணிக்கையில் தான் இருந்தனர்.
இது குறித்து தனியார் பஸ் உரிமையாளர்கள் கூறுகையில், கோவையில் தனியாருக்கு சொந்தமான 3 டவுன் பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது கண்டனத்துக்கு உரியது. தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள் இயக்கிய போது தனியார் டவுன் பஸ்களை மட்டும் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.