கிராமசபை கூட்டத்தில் அரசுக்கு எதிராக கோஷமிட்ட 2 பேர் கைது
ஆர்.எஸ்.மங்கலம் அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆர்.எஸ்.மங்கலம்,
ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் காவனூர் ஊராட்சிக்கு உட்பட்ட அடர்ந்தனார் கோட்டை கிராமத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குணசுந்தரி பார்வையாளராக கலந்து கொண்டார். அப்போது கிராம மக்கள் சார்பில் உப்பூரில் அமையவிருக்கும் அனல் மின் நிலையத்தால் நாகனேந்தல், வளமாவூர் பகுதியில் விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் பாதிக்கப்படும் என்பதால் அதனை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.
ஆனால் அதற்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்று மறுத்து விட்டார். இதையடுத்து அவரை மேல் அதிகாரிகள் வரும் வரை பொதுமக்கள் சிறைபிடித்தனர். தகவல் அறிந்ததும் உயர் அதிகாரி கணேசன், யூனியன் என்ஜினீயர் முத்துகலாதேவி, திருப்பாலைக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணிமுத்து ஆகியோர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதைதொடர்ந்து அதிகாரிகளை அசிங்கமாக பேசியதாகவும், அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதாகவும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குணசுந்தரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் தனமதிவாணன், நாகனேந்தல் வாசுதேவன் மகன் மணிகண்டன், கருணாநிதி மகன் வெங்கடேஷ், பழனிச்சாமி மகன் பார்த்திபன், வளமாவூரை சேர்ந்த வேலு மகன் ராஜகோபால் உள்பட பலர் மீது வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து மணிகண்டன் (வயது 38), வெங்கடேஷ் (24) ஆகியோரை கைது செய்தனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.