காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் கடலில் விழும் அவலம்
பாம்பன் ரோடு பாலம் வழியாக செல்லும் காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் கடலில் வீணாக விழும் அவலம் ஏற்பட்டுள்ளது.
ராமேசுவரம்,
ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வருவது காவிரிகூட்டு குடிநீர் திட்டம். காவிரியில் இருந்து குழாய் மூலம் கொண்டு வரப்படும் குடிநீர், மாவட்டத்தின் பல முக்கிய ஊர்களில் குடிநீரேற்று நிலையத்தில் பம்பிங் செய்து, குழாய் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதன்படி பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம் பகுதிகளுக்கு மண்டபம் காந்திநகர் அருகே உள்ள குடிநீரேற்று நிலையத்தில் இருந்து காவிரி கூட்டு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
ராமேசுவரம் தீவு பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்ல பூமிக்கடியில் குழாய் பதிக்கப்பட்டும், பாம்பன் ரோடு பாலத்தின் நடை பாதை வழியாகவும் குழாய் பதிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் பாம்பன் ரோடு பாலத்தின் நடைபாதையில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி கூட்டு குடிநீர் கடந்த சில நாட்களாக ரோடு பாலத்தின் தடுப்பு சுவரின் இடைவெளி வழியாக வீணாகி கடலில் விழுந்து வருகிறது.
இதை தினமும் ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள், பாலத்தில் இருந்து அருவி போல விழும் குடிநீர் வீணாக கடலில் கலப்பதை பார்த்து வேதனையுடன் செல்கின்றனர். மாவட்டத்தில் பல இடங்களில் குடிக்க தண்ணீர் கிடைக்காமல், பொதுமக்கள் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்தும், தள்ளு வண்டிகளிலும் குடிநீரை கஷ்டப்பட்டு சேகரித்து வருகின்றனர்.
இந்தநிலையில் பாம்பன் ரோடு பாலத்தின் குழாய் உடைப்பால் கடலில் வீணாக குடிநீர் கலப்பதை சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளாமலும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருவது வேதனையளிக்கிறது என்றும், எனவே குழாய் உடைப்பை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.