எண்ணூரில் பெண்ணிடம் கத்திமுனையில் நகை-செல்போன் பறித்த 3 வாலிபர்கள் கைது
எண்ணூரில் பெண்ணிடம் கத்திமுனையில் நகை-செல்போன் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். தப்பிச்சென்ற 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவொற்றியூர்,
திருவொற்றியூரை அடுத்த எண்ணூர் உலகநாதபுரத்தை சேர்ந்தவர் மனோஜ் (வயது 27). இவர் நேற்று முன்தினம் தனது அக்காவுடன் திருவொற்றியூரில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் இரவு இருவரும் பஸ் மூலம் எண்ணூர் வந்து இறங்கி வீட்டுக்கு நடந்து சென்றனர்.
உலகநாதபுரம் அருகே சென்றபோது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 9 வாலிபர்கள் மனோஜ் மற்றும் அவரது அக்காவை திடீரென வழிமறித்தனர். பின்னர் அந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகை மற்றும் செல்போனை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி செல்ல முயன்றனர்.
பொதுமக்கள் மடக்கிப்பிடித்தனர்
அப்போது மனோஜ் கூச்சலிடவே எதிரே 2 மோட்டார் சைக்கிளில் வந்த அதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள், தப்பி ஓடியவர்களில் ஒருவரை மட்டும் மடக்கி பிடித்தனர். மற்ற 8 பேரும் தப்பிச்சென்றனர். பின்னர் அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் பிடிபட்டவருக்கு தர்ம அடி கொடுத்து எண்ணூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில் பிடிபட்டவர் புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவைச் சேர்ந்த பிரதாப் (27) என்பது தெரியவந்தது.
6 பேருக்கு வலைவீச்சு
அவர் கொடுத்த தகவலின் பேரில் தப்பிச்சென்ற அதே பகுதியை சேர்ந்த நரேஷ் (19), தமிழரசன் (20) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 2 செல்போன்கள், 5 பவுன் தங்க நகை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும், தப்பி ஓடிய 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.