சின்னமனூர் அருகே விவசாயி வெட்டிக்கொலை

சின்னமனூர் அருகே விவசாயி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2018-08-17 21:45 GMT
சின்னமனூர்,

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சின்னமனூரை அடுத்த ஓடைப்பட்டி பழைய போலீஸ் நிலையம் அருகே வசித்து வந்தவர் சுருளி என்ற மகாராஜன் (வயது 63). விவசாயி. இவருக்கு, வெள்ளையம்மாள்புரத்தில் தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்துக்கு, தினமும் அவர் மோட்டார் சைக்கிளில் செல்வது வழக்கம். அதன்படி நேற்று காலை வீட்டில் இருந்து தனது தோட்டத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
வெள்ளையம்மாள்புரம் சாலையில் உள்ள ஒரு தனியார் தோட்டம் அருகே அவர் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளை வழிமறித்த ஒருவர், தான் வைத்திருந்த அரிவாளால் மகாராஜனை சரமாரியாக வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

இந்தநிலையில் அந்த வழியாக சென்றவர்கள், மகாராஜன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஓடைப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மகாராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே கொலை நடந்த இடத்தில் இருந்து ரேஷன்கார்டு, ஆதார் அடையாள அட்டை ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். அவை, மூர்த்திநாயக்கன்பட்டியை சேர்ந்த பெருமாள் (41) என்பவருடையது ஆகும். இதனால் அவருக்கு இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இதனையடுத்து அவரை பிடிப்பதற்கு போலீசார் வீட்டுக்கு சென்றனர். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்தநிலையில் மகாராஜனின் மகன் கீர்த்திகுமார், ஓடைப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரில், மூர்த்திநாயக்கன்பட்டியை சேர்ந்த பெருமாள் என்பவர் தனது தந்தையை வெட்டி கொலை செய்திருக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை பிரிந்த பெருமாள், அப்பகுதியில் அரிவாளுடன் வலம் வந்ததை கிராம மக்கள் சிலர் பார்த்துள்ளனர். அவர் தான் மகாராஜனை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. அவரை பிடித்தால் தான் கொலைக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்