கருவூலக பணிகளை நவீனப்படுத்த ரூ.288¾ கோடியில் புதிய திட்டம் கணக்குத்துறை - கருவூலம் ஆணையர் ஜவஹர் தகவல்
தமிழகத்தில் கருவூலக பணிகளை நவீனப்படுத்த ரூ.288¾ கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக, கணக்குத்துறை மற்றும் கருவூலம் ஆணையர் ஜவஹர் தெரிவித்தார்.
தூத்துக்குடி,
தமிழகத்தில் கருவூலக பணிகளை நவீனப்படுத்த ரூ.288¾ கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக, கணக்குத்துறை மற்றும் கருவூலம் ஆணையர் ஜவஹர் தெரிவித்தார்.
திறனூட்டல் மாநாடு
தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் குறித்த அரசு அலுவலர்களுக்கான திறனூட்டல் மாநாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில், முதன்மைச் செயலர்- கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையர் ஜவஹர் கலந்து கொண்டு, மாநாட்டினை தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையர் ஜவஹர் பேசும் போது கூறியதாவது;-
கருவூலம் மற்றும் கணக்குத்துறையானது 1962-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு நிதித்துறையின் கீழ் ஒரு தனித் துறையாக செயல்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள சம்பளம் மற்றும் கணக்கு அலுவலகங்கள், மாவட்டக் கருவூலங்கள் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் மூலமாக 2017-18-ம் நிதியாண்டில் ரூ.1 லட்சத்து 55 ஆயிரத்து 824 கோடி வரவினமாகவும், ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்து 256 கோடி செலவினமாகவும் அரசின் நிதி கையாளப்பட்டு உள்ளது.
ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு நிதி மேலாண்மை தொடர்பான அரசுப் பணிகள் திறம்பட நடைபெறவும் கருவூலப் பணிகளை மேம்படுத்தவும், பிரத்தியேகமான வழிமுறைகளை கையாண்டு மனித வள மேலாண்மையை ஒருங்கிணைத்து, ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தினை செயல்படுத்துவதற்காக அரசு ரூ.288.91 கோடி ஒப்புதல் அளித்து அரசாணை வழங்கி உள்ளது.
பணிப்பதிவேடு
இதை நடைமுறைப்படுத்துவதன் மூலம் கருவூலங்கள் காகிதமற்ற அலுவலகங்களாக மாற்றப்படுவது மட்டுமின்றி சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்கள் தங்களது பட்டியல்களை கருவூலங்களில் சமர்ப்பிக்க நேரில் வர வேண்டிய சூழலும், சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்கள் இணைய வழி மூலம் பட்டியல்களை கருவூலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நேரத்தில் இருந்து பயனாளியின் வங்கிக்கணக்கில் பணம் சேரும் வரையிலான ஒவ்வொரு நிலையையும் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக எளிதாக அறிந்து கொள்ளும் சூழலும் உருவாக்கப்படுகிறது.
தற்போதுள்ள நடைமுறைபடி கருவூலத்தில் பட்டியல் சமர்ப்பித்த நாளிலிருந்து சுமார் 6 முதல் 10 நாட்களுக்கு பிறகே பட்டியல் தொகை பயனாளர்களுக்கு வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. புதியதாக உருவாக்கப்படும் இந்தத் திட்டத்தினால் பட்டியல்கள் சமர்ப்பிக்கப்பட்ட அதே நாளில் வங்கிக் கணக்கில் தீர்வு செய்யப்படும். ஒருவேளை பட்டியல் தொகை அந்தப் பயனாளரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படாத நிலை ஏற்பட்டால் சம்பளம் பெற்று வழங்கும் அலுவலரால் கவனிக்கப்பட்டு உடனடியாக குறைகள் சரிசெய்து காலதாமதத்தை தவிர்க்க முடியும். இந்த திட்டத்தால் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு பணியாளர்களின் பணிப்பதிவேடு பராமரிப்பு எளிமையான முறையில் கணினி மயமாக்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் பணியாளரின் பணிப்பதிவேட்டில் ஏற்படும் தவறான பதிவுகளை சுயசேவை என்ற முறையை பயன்படுத்தி கணினி மூலமாக உரிய அலுவலருக்கு விண்ணப்பித்து சரிசெய்து கொள்ள முடியும். பணிப்பதிவேட்டில் புதியதாக பதியப்படும் பதிவுகள் குறித்த விவரம் உரிய பணியாளருக்கு குறுந்தகவலாக தெரிவிக்கப்படும். இதனால் அரசுப் பணியாளர்கள் தங்களின் சம்பள பிடித்தங்கள் கடன் மற்றும் முன்பணங்கள் விடுப்பு தொடர்பான விவரப் பதிவுகளை அறிய முடியும்.
ஓய்வூதியர்கள்
ஓய்வூதியர்களுக்கான சேவைகள் மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 7 லட்சத்து 39 ஆயிரம் ஓய்வூதியதாரர்களில் 6 லட்சத்து 60 ஆயிரம் ஓய்வூதியதாரர்கள் தங்களது ஓய்வூதியத்தினை கருவூலங்களின் மூலமாக பெற்று வருகின்றனர். பொதுத்துறை வங்கிகள் மூலம் ஓய்வூதியம் பெற்று வந்த சுமார் 79 ஆயிரத்து ஓய்வூதியர்களின் ஓய்வூதியர்கள் கருவூலங்களின் மூலமாக வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஓய்வூதியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவ சிகிச்சை பெற 805 மருத்துவமனைகள் அனுமதிக்கப்பட்டிருந்தது. தற்போது அது 913 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஓய்வூதியர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சைபெறும் வசதி ஏற்படுத்தப்பட்டு இதுவரை 1 லட்சத்து 96 ஆயிரத்து 492 நபர்கள் ரூ.565.58 கோடிக்கான மருத்துவ சலுகையினைப் பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
யார்-யார்?
இந்த திறனூட்டல் மாநாட்டில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா, மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக துணை வேந்தர் பாஸ்கரன், மாநகராட்சி ஆணையாளர் ஆல்பி ஜான்வர்க்கீஸ், உதவி கலெக்டர் (பயிற்சி) அனு, கருவூலம் மற்றும் கணக்குத்துறை கூடுதல் இயக்குனர்கள் அருள்ராஜ், மகாபாரதி, சித்ரா ஜான் பெர்னாண்டோ, நெல்லை மண்டல இணை இயக்குனர் பாத்திமா சாந்தா, கருவூல அலுவலர் பாமினிலதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.