நிர்வாண நிலையில் இளம்பெண் பிணம் கற்பழித்து கொலையா?

மந்தாரக்குப்பம் அருகே முந்திரி தோப்பில் நிர்வாண நிலையில் இளம்பெண் பிணமாக கிடந்தார். அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Update: 2018-08-17 21:30 GMT

மந்தாரக்குப்பம், 

மந்தாரக்குப்பம் அருகே முந்திரி தோப்பில் நிர்வாண நிலையில் இளம்பெண் பிணமாக கிடந்தார். அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மந்தாரக்குப்பம் அருகே உள்ள முதனை கிராமத்தை சேர்ந்தவர் ஹரிகோவிந்தன். விவசாயி. இவருடைய பக்கத்து நிலத்திற்கு நேற்று முன்தினம் மாலையில் தொழிலாளர்கள் வேலைக்கு சென்றனர். அப்போது ஹரிகோவிந்தனின் முந்திரி தோப்பில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த தொழிலாளர்கள், துர்நாற்றம் வீசிய திசைநோக்கி சென்றனர்.

அங்கு நிர்வாண நிலையில் பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது உடல் உப்பிய நிலையில், அழுகி இருந்தது. இது குறித்து அவர்கள், உடனடியாக ஊ.மங்கலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் ஊ.மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று, பிணமாக கிடந்த பெண்ணின் உடலை பார்வையிட்டனர். அந்த பெண்ணுக்கு 30 வயது முதல் 35 வயது வரை இருக்கும். களைந்து கிடந்த சேலையும் ஆங்காங்கே கிழிந்து இருந்தது. எனவே அவரை யாரேனும் கற்பழித்து கொலை செய்திருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அந்த உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த இளம்பெண் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. பெண்ணின் முகம் சிதைந்து இருப்பதால் அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணை யாரும் கடத்தி கொண்டு வந்து முந்திரி தோப்பில் வைத்து கற்பழித்து கொலை செய்தனரா? அல்லது கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்ததா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சமீபத்தில் 30 வயது முதல் 35 வயதுவரையுள்ள பெண்கள் மாயமானதாக நெய்வேலி, மந்தாரக்குப்பம், விருத்தாசலம், கருவேப்பிலங்குறிச்சி, கம்மாபுரம் ஆகிய போலீஸ் நிலையங்களில் புகார் ஏதேனும் வந்துள்ளதா?, அவர்கள் யார்–யார்? என்ற பட்டியலையும் போலீசார் சேகரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்