மலைக்கோவிலுக்கு ரோப்கார் அமைக்கும் பணிகள் 80 சதவீதம் நிறைவு
சோளிங்கரில் உள்ள லட்சுமி நரசிம்மர் மலைக்கோவிலுக்கு செல்ல ரோப்கார் அமைக்கும் பணி 80 சதவீதம் முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிகள் முடிந்தபின்னர் ஒரு மணி நேரத்தில் 300 பேர் ரோப்காரில் செல்ல வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சோளிங்கர்,
சோளிங்கரில் லட்சுமி நரசிம்மர் கோவில் 750 அடி உயர மலைக்குன்றின் மீது அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்ல 1,305 படிக்கட்டுகள் உள்ளன. 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றாக இந்த கோவில் விளங்குகிறது. தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு செல்கின்றனர். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் படிக்கட்டில் ஏறிச்செல்ல முடியாத நிலையில் உள்ளதால் அவர்களில் வசதி படைத்தவர்கள் டோலி மூலம் செல்கின்றனர்.
இந்த கோவிலுக்கு செல்ல ரோப்கார் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வந்தன. அதன்படி கடந்த 2006-ம் ஆண்டு தமிழக அரசு ஒதுக்கிய ரூ.6 கோடியில் ரோப்கார் அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட விபத்தால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன.
இதனை தொடர்ந்து கடந்த 2014-ம் ஆண்டு மறுமதிப்பீட்டில் ரூ.9 கோடியை தமிழக அரசு ஒதுக்கியது. அதனைத்தொடர்ந்து ரோப்கார் அமைக்கும் பணி மீண்டும் தொடங்கியது.
123 குதிரைத்திறன் கொண்ட சக்தி வாய்ந்த மின்மோட்டார்கள் பொருத்தப்பட்டு தரமான ஸ்டீல் உலோகத்தால் தானியங்கி கதவுகளுடன் ரோப்கார் அமைக்கப்படுகிறது. இதற்கான கம்பி வட வழித்தடம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன.
இந்த பணியில் ‘டெல்லி ரைட்ஸ்’ நிறுவனத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வட மாநிலத் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கட்டுமானப்பணிகள் முழுமை அடையும் நிலையில் உள்ளது.
இப்பணி துரிதமாக நடைபெறுவதை கடந்த மாதம் கலெக்டர் ராமன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 4 மாதத்திற்குள் பணிகளை முடிக்க அவர் உத்தரவிட்டார். இந்த நிலையில் 80 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டதாக கோவில் செயல் அலுவலர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.
இந்த ரோப்காரில் நவீன பாதுகாப்பு வசதியுடன் கூடிய தானியங்கி கதவுகள், கைப்பிடிகள் அமைக்கப்படவுள்ளன. ரோப்கார் அமைக்கும் பணிகள் முடிந்து சேவை தொடங்கப்பட்டால் 1 மணி நேரத்தில் 300 பக்தர்கள் அதில் பயணித்து சாமி தரிசனம் செய்ய முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே பணிகள் முடியும் நாளை பக்தர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.