முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும்
முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் அரசியல் செய்யாமல், நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்று பென்னிகுவிக் பேத்தி டயானா ஜிப் தெரிவித்தார்.
தேனி,
முல்லைப்பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் அண்ணன் வழி பேத்தி டாக்டர் டயானா ஜிப். இவர் கடந்த ஜனவரி மாதம் பென்னிகுவிக் பிறந்த நாள் கொண்டாட தேனிக்கு வந்திருந்தார். 2-வது முறையாக அவர் நேற்று முன்தினம் தேனிக்கு வந்தார்.
கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேனி, சின்னமனூர், கம்பம் பகுதிகளில் நிவாரணப் பொருட்களை அவர் சேகரித்தார். பின்னர், அந்த நிவாரண பொருட்களை கம்பம், உத்தமபாளையம் பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் குழுவினருடன் கேரள மாநிலம் இடுக்கி கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் கொண்டு செல்ல முயன்றார்.
பலத்த மழை பெய்ததாலும், செல்லும் பகுதியில் சாலைகள் சேதம் அடைந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருந்ததாலும் கட்டப்பனையுடன் பயணத்தை நிறுத்தி கொண்டனர். பின்னர் கட்டப்பனையில் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் நிவாரணப் பொருட்கள் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து தேனி என்.ஆர்.டி. மருத்துவமனையில் நடந்த ரத்த தான முகாமை அவர் தொடங்கி வைத்தார். பின்னர், அங்கு கர்ப்பிணிகள், தாய்மார்களுக்கு குழந்தைகள் நலன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். முகாமிற்கான ஏற்பாடுகளை மருத்துவமனை டாக்டர் தியாகராஜன் செய்திருந்தார்.
இதைத்தொடர்ந்து டாக்டர் டயானா ஜிப் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்று போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனை சந்தித்து பேசினார். பின்னர் கலெக்டரை சந்திப்பதற்காக கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கேரள மாநில மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளதை எண்ணி மனம் மிகவும் வருந்துகிறேன். அவர்கள் இந்த துயரத்தில் இருந்து மீண்டு வர வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன். கேரளாவுக்கு இந்த பகுதியை சேர்ந்த இளைஞர்களுடன் நான் சேகரித்து அனுப்பிய நிவாரணம் என்பது ஒரு துளி அளவு தான்.
முல்லைப்பெரியாறு அணை மிகவும் பலமான அணை. உலக அளவில் பலமான அணைகளில் ஒன்று இது. இந்த அணையில் 152 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க வேண்டும். அந்த கனவோடு தான் பென்னிகுவிக் இந்த அணையை கட்டி இருக்கிறார்.
அணை விவகாரத்தில் அரசியல் செய்யாமல், கேரள மாநில மக்களின் நலனை கருத்தில் கொண்டு நீர்மட்டத்தை மீண்டும் 152 அடியாக உயர்த்த வேண்டும். அணையில் இருந்து உபரிநீரை திறப்பதை நிறுத்தி நீரை 152 அடி வரை தேக்கி வைக்க இருமாநில அரசுகளும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.
அணையை கட்டிய வரலாறு குறித்த புத்தகத்தில் அணையின் பலம் குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே, கேரள மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. இருமாநில மக்களிடையே நட்புறவு நீடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.