சுதந்திர தினத்தையொட்டி கிராமசபை கூட்டம்-சமபந்தி விருந்து

சுதந்திர தினத்தையொட்டி கிராமசபை கூட்டம்-சமபந்தி விருந்து நடந்தது. மரிக்குண்டு கிராமத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் பல்லவி பல்தேவ் கலந்து கொண்டார்.

Update: 2018-08-16 21:30 GMT
கண்டமனூர்,


சுதந்திர தினத்தையொட்டி தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடந்தது. அதன்படி ஆண்டிப்பட்டி தாலுகா மரிக்குண்டு கிராமத்தில் நடந்த கிராமசபை கூட்டத்துக்கு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் முத்துப்பாண்டி தலைமை தாங்கினார். பெரியகுளம் ஆர்.டி.ஓ. ஜெயபிரீத்தா, திட்ட இயக்குனர் (பொறுப்பு) பவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊராட்சி உதவி இயக்குனர் ஹனிபா வரவேற்றார். ஊராட்சி செயலர் பிச்சை மணி வரவு-செலவு அறிக்கை சமர்ப்பித்தார். இந்த கூட்டத்தில் கலெக்டர் பல்லவி பல்தேவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசும்போது, கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும். அப்போது தான் உங்களது உரிமைகளை கேட்டு பெற முடியும். ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் முக்கியமாக இருக்க வேண்டியது ஆரோக்கியம் ஆகும். இதற்காக சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை நீங்கள் பெற வேண்டும். திறந்தவெளியில் மலம் கழிக்கக்கூடாது. பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது. மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பிரித்து போட வேண்டும் என்றார்.

கூட்டத்தில் முழு சுகாதார தமிழகம், முன்னோடி தமிழகம் என்ற உறுதிமொழியை கலெக்டர் வாசிக்க கிராம மக்கள் திரும்ப சொல்லி உறுதி எடுத்து கொண்டனர். இதேபோல் தனி நபர் இல்ல கழிப்பறை கட்டியவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், அவர்களுக்கு பரிசுகள் வழங்கி கலெக்டர் பாராட்டினார்.

மேலும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க, அந்த கிராமத்துக்கு துணிப்பைகளை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் தாசில்தார்கள் அர்ஜுனன், இளங்கோ, வட்டார மருத்துவர் இளங்கோ, வட்டார வளர்ச்சி அலுவலர் எபி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

சுதந்திர தினத்தையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில், வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் சமபந்தி விருந்து நடந்தது. இதற்கு கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு இலவச வேட்டி-சேலைகளை வழங்கினார். இதைத்தொடர்ந்து நடந்த அன்னதான நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் அமர்ந்து கலெக்டர் உணவு சாப்பிட்டார்.

முன்னதாக கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தேனி போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், பேரூராட்சி செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பாலகிருஷ்ணன், மேலாளர் பாலசுப்பிரமணியம், கணக்காளர் பழனியப்பன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். இதேபோல் போடி சுப்பிரமணியசுவாமி கோவில், சவுடம்மன் கோவில், பெருமாள் கோவில் ஆகியவற்றில் சமபந்தி விருந்து நடந்தது. 

மேலும் செய்திகள்