சாலைபோக்குவரத்து விழிப்புணர்வு குறுந்தகடு நாராயணசாமி வெளியிட்டார்

ஹலோ எப்.எம்.106.4 சார்பில் தயாரிக்கப்பட்ட சாலை போக்குவரத்து விழிப்புணர்வு ஆடியோ குறுந்தகடை (சி.டி.) முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டார்.

Update: 2018-08-16 23:45 GMT
புதுச்சேரி,

புதுவை நகரங்களில் முக்கிய சாலை சந்திப்புகளில் போக்குவரத்து சிக்னல்கள் உள்ளன. இதில் தற்போது சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து ஒலிபரப்பப்பட்டு வருகிறது. இதுகுறித்து பொதுமக்களுக்கு மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் செய்ய ஹலோ எப்.எம். 106.4 நிறுவனம் புதிய முயற்சிகளை மேற்கொண்டது.

இதைத்தொடர்ந்து புதுவை போக்குவரத்து காவல்துறையுடன் இணைந்து சாலை போக்குவரத்து பிரசார ஆடியோ குறுந்தகடை (சி.டி.) தயாரித்தது. அதில் சாலை விதிகளை மதிப்பது, எந்த இடத்தில் இருந்து எந்த இடத்திற்கு முறைப்படி செல்வது, எந்தப்பக்கம் செல்லக்கூடாது என்பன போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த ஆடியோ குறுந்தகடு வெளியிடும் நிகழ்ச்சி சட்டசபை வளாகத்தில் நடந்தது. இதில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு குறுந்தகடை வெளியிட்டார். அதனை போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் போலீஸ் டி.ஐ.ஜி. சந்திரன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா, போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு பால கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த குறுந்தகடு மூலம் விழிப்புணர்வு வாசகங்கள் புதுச்சேரி நகரில் உள்ள அனைத்து போக்குவரத்து சிக்னல்களிலும் ஒலிபரப்பப்பட்டது.

மேலும் செய்திகள்