போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த பொன்னேரி கல்லூரி பேராசிரியர் கைது

போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த பொன்னேரி கல்லூரி பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-08-16 22:30 GMT
பொன்னேரி,

தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் காலியாக இருந்த உதவி பேராசிரியர் பணியிடங்கள் கடந்த 2011-ம் ஆண்டு நிரப்பப்பட்டன. இதில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மகாலிங்கம் (வயது 45) என்பவர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள உலகநாத நாராயணசாமி அரசு கல்லூரியில் இயற்பியல் துறை உதவி பேராசிரியராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தார்.

இதற்கிடையே சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரி கல்வி இயக்குனரகத்தில் மகாலிங்கத்தின் கல்வி சான்றிதழ்கள் சரி பார்க்கப்பட்டன. அப்போது அவரது கல்வி சான்றிதழ்களில் சந்தேகம் ஏற்பட்டது.

கைது

தொடர்ந்து ஆய்வு செய்தபோது, பீகார் மாநிலத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு படித்ததாக கூறி அவர் போலி சான்றிதழை கொடுத்து பணியில் சேர்ந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக கடந்த 6 மாதங்களாக கல்லூரி கல்வி இயக்குனரக அலுவலகத்தில் விசாரணை நடந்து வந்தது. இந்தநிலையில் இயக்குனரக அதிகாரிகள் உத்தரவின்பேரில் கல்லூரி முதல்வர் பொன்னேரி போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பேராசிரியர் மகாலிங்கத்தை கைது செய்து பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்