தமிழகத்தில் 6 மாநகராட்சிகள், 30 நகராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் நகராட்சி நிர்வாக கமிஷனர் தகவல்

தமிழகத்தில் 6 மாநகராட்சிகள், 30 நகராட்சிகளில் நுண் உரக்கூடங்கள் அமைக்கப்பட்டு திடக் கழிவு மேலாண்மை திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாக தமிழக நகராட்சிகளின் நிர்வாக கமிஷனர் பிரகாஷ் தெரிவித்தார்.

Update: 2018-08-16 23:15 GMT
தாம்பரம், 

சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம் ஆகிய நகராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள நுண் உரக்கூடங்கள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகளை தமிழக நகராட்சிகளின் நிர்வாக கமிஷனர் பிரகாஷ் நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

வெற்றிகரமாக செயல்படுகிறது

தமிழகத்தில் நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 6 மாநகராட்சிகளிலும், 30 நகராட்சிகளிலும் தற்போது நுண் உரக்கூடங்கள் அமைக்கப்பட்டு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை மிகவும் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறோம்.

இந்த கழிவுகளை 3 வகைகளாக பிரிக்கிறோம். இதில் மார்க்கெட் குப்பைகள், வீட்டு உணவு கழிவுகள், ஓட்டல் கழிவுகள் என எளிதில் மக்கும் தன்மை உடைய கழிவுகள் ஒரு வகையாகவும், மக்காத குப்பையான பிளாஸ்டிக் பொருட்களில் மறுசுழற்சிக்கு தேவைப்படும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பது 2-வது வகையாகவும், மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்குகளை சிமெண்டு மற்றும் சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பி வைப்பது 3-வது வகையாகவும் பிரித்து கையாள்கிறோம்.

6 மாதங்களில்...

செங்கல்பட்டு மண்டலத்தை பொறுத்தவரை அனைத்து நகராட்சிகளிலும் இந்த முறையை கொண்டு வந்துள்ளோம். இதற்கு அதிக செலவு ஆவதில்லை. குப்பைமேடுகள் உருவாகும் நிலை தவிர்க்கப்படும்.

இன்னும் 6 மாதங்களுக்குள் அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும்.

பொதுமக்களுக்கும் பங்கு

சரியான முறையில் கையாளத்தெரியாமலும், முறையாக ரசாயன கலவையை கலக்காமல் இருப்பதாலும் நுண் உரக்கூடங்களில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. இதுபோன்ற பிரச்சினை வராமல் இருக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

சுகாதாரம், தூய்மை திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் பொறுப்பு நகராட்சி மற்றும் பணியாளர்களுக்கு மட்டும் இல்லை. பொதுமக்கள் அனைவருக்கும் இதில் பங்கு உள்ளது. இந்த பணிகளை வீட்டில் இருந்து தொடங்க வேண்டும். எனவே மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து தர வேண்டும் என பொதுமக்களை வலியுறுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது செங்கல்பட்டு மண்டல இயக்குனர் இளங்கோவன், மண்டல பொறியாளர் முருகேசன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்