வங்கிகள் மூலமாக ஊதியம் பட்டுவாடா செய்யக்கோரி தேசிய தொலைதொடர்பு ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

வங்கிகள் மூலமாக சம்பளம் பட்டுவாடா செய்யக்கோரி தஞ்சையில் தேசிய தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-08-16 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட தேசிய தொலைதொடர்பு ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகே உள்ள தொலைதொடர்பு அலுவலகம் முன்பு நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பிரின்ஸ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாநில துணைத்தலைவர் ஆறுமுகம், மாநில இணைச்செயலாளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

குறைந்த சம்பளம் பெறும் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 7-ந்தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய விதிகளின்படி இன்னும் வழங்கப்படவில்லை. இன்னும் சில இடங்களில் நிர்வாகமே ஒப்பந்த ஊழியர்களை நியமித்து அவர்களை எந்த கணக்கிலும் இல்லாது நிர்வகித்து வருகிறது. எனவே ஒப்பந்த ஊழியர்களுக்கு வங்கி மூலமாகவே சம்பள பணம் பட்டுவாடா செய்யப்படவேண்டும். ஒப்பந்ததாரர்களுக்கு புகைப்பட அடையாள அட்டை வழங்க வேண்டும்.

குறைந்தபட்ச போனஸ் 30 நாட்களுக்கு உரிய சம்பளத்தையாவது இனிவரும் காலங்களில் வழங்க வேண்டும். இந்தப் பணிக்கு இந்த சம்பளம் என்ற வரையறை தற்போது இல்லாமல் உள்ளது. தனித்தன்மைக்கு ஏற்றார்போல் அதை வரை முறைப்படுத்தி சம்பளம் மாற்றம் கொண்டுவரவேண்டும். தொழிலாளர் நல ஆணையர் உத்தரவுப்படி 2008-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரையிலான நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஒப்பந்த ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்