அரசின் சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் விழா: கீழுர் நினைவிடத்தில் கவர்னர், முதல்-அமைச்சர் மரியாதை

புதுச்சேரி அரசின் சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் விழாவையொட்டி கீழுர் நினைவிடத்தில் கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Update: 2018-08-16 23:30 GMT
வில்லியனூர்,

பிரெஞ்சு ஆட்சியில் இருந்து 1.11.1954-ம் ஆண்டு புதுச்சேரி விடுதலை பெற்றது. அதன் பிறகு இந்திய அரசுடன் இணைய வேண்டுமா? வேண்டாமா? என்று வில்லியனூர் அருகே உள்ள கீழுர் கிராமத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் 178 பஞ்சாயத்து உறுப்பினர்கள் பங்கேற்றனர். இவர்களில் இந்திய அரசுடன் இணைவதற்கு 170 பேரும், எதிராக 8 பேரும் வாக்களித்தனர். இதையடுத்து 16.8.1962-ல் இந்திய அரசுடன் புதுச்சேரி அரசு இணைக்கப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் பங்கேற்ற வர்களின் பெயர் பட்டியல் அடங்கிய நினைவுத்தூண் கீழுரில் நிறுவப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசு இந்தியா அரசுடன் இணைக்கப்பட்ட ஆகஸ்டு 16-ந் தேதி புதுச்சேரி அரசின் சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் விழாவாக ஆண்டுதோறும் கீழுர் நினைவிடத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி புதுச்சேரி கலை பண்பாட்டுத்துறை சார்பில் நேற்று கீழூர் நினைவிடத்தில் சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் விழா கொண்டாடப்பட்டது.

விழாவில் கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் நினைவுத் தூணில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தியாகிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

விழாவில் சபாநாயகர் வைத்திலிங்கம், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர் கந்தசாமி, தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், சுகுமாறன் எம்.எல்.ஏ. மற்றும் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்