விவசாயிகள், ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது - முதல்மந்திரி பட்னாவிஸ்

விவசாயிகள், ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காக மாநில அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சுதந்திர தின விழாவில் தேசிய கொடி ஏற்றி வைத்து பேசினார்.

Update: 2018-08-15 23:22 GMT
மும்பை,

மராட்டிய மாநில அரசு சார்பில் நாட்டின் 72-வது சுதந்திர தின விழா மாநில அரசின் தலைமை செயலகமான மந்திராலயாவில் நேற்று நடந்தது. இதில் முதல் - மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தேசிய கொடியை ஏற்றினார். பின்னர் அவர் பாதுகாப்பு படையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:-

தொழில் துறை வளர்ச்சியில் மாநில அரசு கவனம் செலுத்தி வருகிறது. மாநில அரசின் நீர்பாசன திட்டங்கள் மூலம் வறட்சியால் பாதிக்கப்பட்ட 16 ஆயிரம் கிராமங்கள் பலன் அடைந்துள்ளன. தொடர்ந்து 25 ஆயிரம் கிராமங்களில் ‘ஜல்யுக்த் சிவார்' என்ற குறுநீர்பாசன திட்டத்தை செயல்படுத்த மாநில அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த திட்டத்தில் ஆறு, கால்வாய், குளம் போன்ற நீர்நிலைகளை அகலப்படுத்துவது, விரிவுப்படுத்துவது, சிமெண்ட் தளம் போடுவது, விவசாய நிலத்தில் சிறு குளம் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

விவசாயிகள், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் நலனுக்காக மாநில அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறது. மராட்டியத்தில் தான் சத்ரபதி சிவாஜி மகாராஜ், ஜோதிராய் புலே, அம்பேத்கர் ஆகியோர் சரிசமமாக நடத்தப்படுகின்றனர். நகர், புறநகர் என சமூகத்தின் எல்லா அங்கத்தினரின் வளர்ச்சியிலும் அரசு கவனம் செலுத்தி வருகிறது. ‘2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு' திட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் வகையில் மாநிலம் வீறுநடை போட்டு கொண்டு இருக்கிறது. தூய்மை இந்தியா, தூய்மை நகரம் போன்ற மத்திய அரசின் திட்டங்கள் பாராட்டுக்குரியவை. நாட்டில் வாழத்தகுந்த நகரங்களின் பட்டியலில் மராட்டியத்தின் புனே, நவிமும்பை மற்றும் மும்பை முறையே முதல் 3 இடங்களை பிடித்துள்ளன.

பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மராட்டியம் அதிகளவு முதலீட்டை ஈர்த்து வருகிறது. நாட்டின் மொத்த முதலீட்டில் 42 முதல் 47 சதவீதம் வரை மராட்டியத்தில் செய்யப்படுகிறது. இதனால் மாநிலத்தில் வேலை வாய்ப்பு அதிகரித்து உள்ளது. கடந்த ஆண்டில் மாநிலத்தில் 8 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளது தொழிலாளர் சேமநல நிதி அமைப்பின் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

மாநில அரசு கடந்த 3 ஆண்டுகளில் விவசாயிகளிடம் இருந்து ரூ.8 ஆயிரம் கோடிக்கு விளை பொருட்களை கொள்முதல் செய்துள்ளது. ஆனால் முந்தைய காங்கிரஸ் அரசு 15 ஆண்டுகளில் ரூ.450 கோடிக்கு மட்டுமே விவசாயிகளிடம் விளை பொருட்களை கொள்முதல் செய்து உள்ளது. இதன் மூலம் எங்கள் அரசு விவசாயிகள் நலனில் எவ்வளவு அக்கறை கொண்டு உள்ளது என்பதை அறியலாம். இவ்வாறு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசினார்.

மேலும் செய்திகள்