மின்சார உற்பத்தி மூலம் ரூ.218½ கோடி லாபம்
தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல்மின்நிலையத்தில் மின்சார உற்பத்தி மூலம் ரூ.218½ கோடி லாபம் ஈட்டியுள்ளதாக முதன்மை செயல் அதிகாரி ஷாஜிஜான் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் என்.எல்.சி. தமிழ்நாடு பவர் லிமிடெட் (என்.டி.பி.எல்) அனல்மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் சுதந்திர தின விழா என்.டி.பி.எல். ஊழியர் குடியிருப்பில் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு என்.டி.பி.எல். நிறுவன முதன்மை செயல் அதிகாரி ஷாஜிஜான் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து, மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக என்.எல்.சி. நிறுவன முன்னாள் இயக்குனர் ராஜகோபால் கலந்து கொண்டார்.
விழாவில் நிறுவன முதன்மை செயல் அதிகாரி ஷாஜிஜான் பேசியதாவது:-
இந்தியா பல்வேறு துறைகளில் வளர்ச்சி பெற்று வருகிறது. என்.டி.பி.எல். அனல்மின் நிலையம் கடந்த நிதியாண்டில் 5412.996 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்து உள்ளது. இதன் மூலம் ரூ.218.48 கோடி லாபம் ஈட்டி உள்ளது. என்.டி.பி.எல். நிறுவனம் 2017-18-ம் ஆண்டுக்கான இடைக்கால ஈவுத்தொகையாக ரூ.21 கோடியே 88 லட்சம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிறுவனத்தின் 1-வது மின்உற்பத்தி எந்திரம் தொடர்ச்சியாக 115 நாட்கள் மின்சாரம் உற்பத்தி செய்து உள்ளது. 2-வது மின்உற்பத்தி எந்திரம் 103 நாட்கள் தொடர்ந்து மின்உற்பத்தி செய்து உள்ளது. இந்த நிறுவனம் 4 லட்சத்து 89 ஆயிரத்து 505 மெட்ரிக் டன் நிலக்கரியை வ.உ.சி. துறைமுகம் மூலம் கையாண்டு உள்ளது என்றார்.