பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 13 அடி உயர்வு
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 13 அடி உயர்ந்துள்ளது. கருப்பாநதி, அடவிநயினார், குண்டாறு ஆகிய 3 அணைகள் நிரம்பின. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் நீர்ப்பிடிப்பு பகுதியிலும் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய பலத்த மழை பெய்தது. நேற்று காலையிலும் தொடர்ந்து மழை பெய்தது.
தொடர் மழையின் காரணமாக பாபநாசம், சேர்வலாறு, ராமநதி, கடனாநதி ஆகிய அணைகளுக்கு தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் 124 அடியாக இருந்த பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 137 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் 13 அடி உயர்ந்தது. பாபநாசம் அணையின் மொத்த கொள்ளளவு 143 அடியாகும். முழு கொள்ளவை எட்ட இன்னும் 6 அடி மட்டுமே தண்ணீர் நிரம்ப வேண்டி உள்ளது.
பாபநாசம் அணை வேகமாக நிரம்பி வருவதால் அணையில் இருந்து நேற்று முன்தினம் இரவு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றங்கரையோர பகுதியில் உள்ள பல மரங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.
நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை முருகன் கோவிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் கருப்பந்துறை ஆற்றுப்பாலத்தை தொடும் அளவுக்கு தண்ணீர் ஓடுகிறது. நெல்லை கொக்கிரகுளம் ஆற்றுப்பாலத்துக்கு அருகில் தற்காலிக பாலம் அமைப்பதற்காக பொருட்கள் போடப்பட்டு இருந்தன. அவை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. குறுக்குத்துறை தாம்போதி பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதையடுத்து கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. பல இடங்களில் கரையோர பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.
தொடர் மழை காரணமாக, குண்டாறு, அடவிநயினார், கொடுமுடியாறு ஆகிய அணைகள் நிரம்பி உள்ளன. கருப்பாநதி, கடனாநதி ஆகிய அணைகள் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளன. நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி அதிகபட்சமாக செங்கோட்டையில் 272 மில்லிமீட்டர் மழை பதிவானது. மற்ற பகுதிகளில் பதிவான மழை விவரம் (மில்லிமீட்டரில்) வருமாறு:-
அம்பை- 64, ஆய்க்குடி- 18, சேரன்மாதேவி- 53.20, மணிமுத்தாறு- 9.60, நாங்குநேரி- 10, பாளையங்கோட்டை- 25.20, பாபநாசம்- 187, ராதாபுரம்- 35, சங்கரன்கோவில்- 12, தென்காசி- 53, நெல்லை- 14.