திருச்சியில் சுதந்திரதின விழா கொண்டாட்டம்: கலெக்டர் ராஜாமணி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்

திருச்சியில் நடந்த சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தில், கலெக்டர் ராஜாமணி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் ரூ.40 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

Update: 2018-08-15 22:45 GMT

திருச்சி,

திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தினவிழா கொண்டாட்ட நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. சரியாக காலை 9.20 மணிக்கு தேசியக்கொடியை கலெக்டர் ராஜாமணி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வண்ண பலூன்களையும், வெண் புறாக்களையும் அவர் பறக்க விட்டார்.

தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பை திறந்த ஜீப்பில் சென்றவாறு பார்வையிட்டார். அவருடன் போலீஸ் பயிற்சி பள்ளி சூப்பிரண்டு லில்லிகிரேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாஉல்ஹக் சென்றனர். பின்னர் மாவட்ட ஆயுதப்படை போலீசார், போக்குவரத்து பிரிவு போலீசார், ஊர்க்காவல் படையினர், தீயணைப்பு வீரர்கள், என்.எஸ்.எஸ். மற்றும் என்.சி.சி. மாணவர்கள் அணிவகுப்பு நடத்தி மரியாதை செலுத்தினர். அதை கலெக்டர் ஏற்றார். பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகள் 107 பேர், சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து அரசின் பல்வேறு துறைகளில் 25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய 12 பேருக்கும், சிறப்பாக பணியாற்றிய 79 பேருக்கும், காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 5 பேருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விளையாட்டு போட்டிகளில் தேசிய அளவில் வெற்றி பெற்று தங்கம், வெண்கலம் மற்றும் வெள்ளிப்பதக்கம் பெற்ற வீரர், வீராங்கனைகள் 5 பேருக்கு பாராட்டு சான்றுகள் வழங்கப்பட்டன.

அரசின் வருவாய்த்துறை, வேளாண்துறை, ஊரக வாழ்வாதார இயக்கம், சமூகநலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் தாட்கோ ஆகிய 9 துறைகள் சார்பில் திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, மானிய விலையில் பண்ணை கருவிகள், சமுதாய முதலீட்டு நிதி, மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்கூட்டர், சலவைப்பெட்டி, வீட்டுமனைப்பட்டா, தையல் எந்திரம், சரக்கு வாகனம், சுற்றுலா வாகனம் என 45 பயனாளிகளுக்கு ரூ.40 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் கலெக்டர் ராஜாமணி வழங்கினார்.

இறுதியில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மெட்ரிக் பள்ளி மாணவ–மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. தேசிய ஒருமைப்பாடு நடனம், அரசு பள்ளி மாணவிகளின் ஒயிலாட்டம், வந்தே மாதரம் பாடல் நடனம், பாரம்பரிய கலைகள், சிலம்பாட்டம் என மாணவ–மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் பார்ப்போரை வியக்க வைக்கும் வகையில் இருந்தன.

விழாவில் திருச்சி மாநகர போலீஸ் கமி‌ஷனர் அமல்ராஜ், மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூ, திருச்சி சரக டி.ஐ.ஜி. லலிதா லட்சுமி, மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர்கள் நிஷா, மயில்வாகனன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) பழனிதேவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, கோட்டாட்சியர்கள் பாலாஜி, பொன் ராமர், ரவிச்சந்திரன் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்