வேலூரில் சுதந்திரதின விழா: கலெக்டர் ராமன் தேசிய கொடியேற்றினார்
வேலூரில் நடந்த சுதந்திரதின விழாவில் கலெக்டர் ராமன் தேசிய கொடியேற்றி வைத்து ரூ.1 கோடியே 47 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
வேலூர்,
இந்தியாவின் 72-வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் கோலாகலமாக நேற்று கொண்டாடப்பட்டது. வேலூரில் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நடந்த சுதந்திரதின விழாவில் கலெக்டர் ராமன் கலந்து கொண்டு காலை 9-20 மணிக்கு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மூவர்ண பலூன்களையும் அவர் வானில் பறக்கவிட்டார்.
அதைத்தொடர்ந்து கலெக்டர் ராமன் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உடன் இருந்தார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ராமன் ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் தியாகிகளை கவுரவிக்கும் வகையில் அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு சென்று சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு பொன்னாடை அணிவித்து, இனிப்பு வழங்கி கலெக்டர் ராமன் கவுரவித்தார்.
அதன்பின்னர் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணி புரிந்த ஊழியர்கள் 150 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களும், தேசிய அளவில் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்த 9 வீரர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் வருவாய்த்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை, மகளிர் திட்டம், மாவட்ட தொழில் மையம், தாட்கோ ஆகிய துறைகளின் மூலம் 48 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 47 லட்சத்து 67 ஆயிரத்து 695 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ராமன் வழங்கினார்.
அதைத்தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சுதந்திர தினத்தை போற்றும் வகையிலும், தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் வகையிலும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மேலும் நடனம், யோகா போன்ற நிகழ்ச்சியிலும் மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து பள்ளி மாணவ- மாணவிகளுக்கும் பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
விழாவில் வேலூர் சரக டி.ஐ.ஜி. வனிதா, சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி, ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ., உதவி கலெக்டர் மேகராஜ், முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக கோட்டை முன்பாக உள்ள காந்தி சிலைக்கு கலெக்டர் ராமன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கோட்டை கொத்தளத்திலும் அவர் தேசிய கொடியேற்றி வைத்தார். விழாவை தொடர்ந்து வேலூர் நேரு பூங்கா எதிரே உள்ள இந்திய செஞ்சிலுவை சங்க பார்வையற்ற பள்ளி குழந்தைகள் மையத்தில் கலெக்டர் கொடியேற்றினார். பின்னர் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இதேபோல் வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் கமிஷனர் விஜயகுமார் தேசிய கொடியேற்றினார். இதில், மாநகராட்சி என்ஜினீயர், நகர்நல அலுவலர் மணிவண்ணன், மண்டல அலுவலர்கள், மாநகராட்சி ஊழியர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் அரசு அலுவலகங்களில் தேசியகொடி ஏற்றப்பட்டன.