சேலத்தில் சுதந்திர தினவிழா கோலாகலம்: கலெக்டர் ரோகிணி தேசிய கொடி ஏற்றினார்

சேலத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் மாவட்ட கலெக்டர் ரோகிணி தேசிய கொடியை ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தது.

Update: 2018-08-15 23:00 GMT
சேலம்,

நாடு முழுவதும் நேற்று 72-வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சேலத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தினவிழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. விழாவில் கலந்து கொள்வதற்காக மாவட்ட கலெக்டர் ரோகிணி காலை 9.18 மணிக்கு மைதானத்திற்கு காரில் வந்திறங்கினார். அவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜோர்ஜி ஜார்ஜ் வரவேற்றார்.

பின்னர், காந்தி விளையாட்டு மைதான மையப்பகுதியில் காலை 9.20 மணிக்கு கலெக்டர் ரோகிணி தேசியகொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது போலீஸ் பேண்டு வாத்திய குழுவினர் தேசிய கீதம் இசைத்தனர்.

அதைத்தொடர்ந்து சமாதானத்தை குறிக்கும் வகையில் வண்ண, வண்ண பலூன்கள் பறக்க விடப்பட்டன. தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பை திறந்த ஜீப்பில் சென்றவாறு கலெக்டர் ரோகிணி பார்வையிட்டார். அவருடன் போலீஸ் சூப்பிரண்டு ஜோர்ஜி ஜார்ஜ் உடன் சென்றார்.

அதைத்தொடர்ந்து பேண்டு வாத்தியம் முழங்க மாவட்ட ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் போலீசார் அணிவகுப்பு நடத்தினர். மேலும் அணிவகுப்பில் முதல் படை பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலும், 2-ம் படை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பாலசரஸ்வதி தலைமையிலும், 3-ம் படை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் தலைமையிலும், ஊர்க்காவல் படையினர் கமாண்டர் ராம்குமார் தலைமையிலும் நடந்தது. மேலும் என்.சி.சி. மாணவர்களும் அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த சாமியானா பந்தலில் நடைபெற்றது. சுதந்திர போராட்ட தியாகிகளை கலெக்டர் ரோகிணி பொன்னாடை அணிவித்து கவுரவித்ததுடன் நினைவு பரிசுகளையும் வழங்கினார். இதன்பிறகு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வருவாய்த் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் இலவச தையல் எந்திரம், சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில் நலிந்தோர் நல உதவி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் இலவச சலவைப்பெட்டி, வேளாண்மை துறை, ஊரக வளர்ச்சித்துறை, கல்வித்துறை, மகளிர் திட்டம் சார்பில் உதவி என மொத்தம் 35 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சத்து 74 ஆயிரத்து 496 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ரோகிணி வழங்கினார்.

இதையடுத்து சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் சிறந்த சேவைபுரிந்த காவல்துறை சேர்ந்தவர்கள் மற்றும் அரசின் இதர துறைகளை சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் என மொத்தம் 221 பேருக்கு கலெக்டர் ரோகிணி பாராட்டு சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.

தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. வாழப்பாடி கோகுலம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் தேசபக்தி பாடல், சேலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் நாட்டுப்புற பாடல்கள், சின்னப்பம்பட்டி கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப்பள்ளி மாணவிகளின் தேசபக்தி பாடல், சேலம் சி.எஸ்.ஐ.குட்ஷெப்பர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளின் தேசிய பக்திபாடல் நடனம், ஏத்தாப்பூர் அபிநவம் ஏகலைவா பெண்கள் மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் தெம்மாங்கு பாடல், மேட்டூர் அணை மால்கோ வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் தேசபக்தி பாடல் என 6 பள்ளிகளை சேர்ந்த 646 மாணவ-மாணவிகள் கண்கவர் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். இது பார்வையாளர்களை கவர்ந்தது. முடிவில், கலை நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பள்ளிகளுக்கு நினைவுப்பரிசும், மாணவ-மாணவிகளுக்கு நற்சான்றிதழ்களையும் கலெக்டர் ரோகிணி வழங்கினார்.

விழாவில் சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர், சேலம் சரக டி.ஐ.ஜி. செந்தில்குமார், சேலம் மண்டல மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அருள்ஜோதி அரசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஜெகநாதன், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மாரியப்பன், மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பூங்கொடி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜய்பாபு, உதவி கலெக்டர் குமரேஸ்வரன், மாவட்ட ஊர்க்காவல் படை துணை கமாண்டர் பெரியசாமி உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக காந்தி விளையாட்டு மைதானத்திற்கு வந்த பொதுமக்கள், அதிகாரிகள் அனைவரும் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். 

மேலும் செய்திகள்