சுதந்திர தினத்துக்கு விடுமுறை விடாத 101 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

சுதந்திர தினத்துக்கு விடுமுறை விடாத 101 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2018-08-15 21:45 GMT
திருவண்ணாமலை,


தமிழகம் முழுவதும் அரசால் அறிவிக்கப்பட்டு நிறுவனங்கள் ஒப்புக்கொண்டபடி விடுமுறை என அறிவிக்கப்பட்ட நாட்களில் தொழிலாளர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதா? என்பதை அறிய தொழிலாளர் துறையினர் ‘திடீர்’ ஆய்வு நடத்துவது வழக்கம். நேற்று சுதந்திர தினத்தையொட்டி அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சென்னை கூடுதல் தொழிலாளர் ஆணையர் எஸ்.யாஸ்மின் பேகம் மற்றும் வேலூர் தொழிலாளர் இணை ஆணையர் பி.மாதவன் ஆகியோரது அறிவுரைப்படி திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) செந்தில்குமரன் தலைமையிலான குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் சாந்தி, மனோகரன், ஆத்திப்பழம், தனலட்சுமி ஆகியோர் ஈடுபட்டனர். அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் மற்றும் வேலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்களில் ஆய்வு நடத்தினர்.

அவர்கள் 147 நிறுவனங்களில் ஆய்வு நடத்தினர். அதில் கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 56 நிறுவனங்களிலும், உணவு நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 35 நிறுவனங்களிலும் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 10 நிறுவனங்களிலும் ஆக மொத்தம் 101 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டது.

இந்த நிறுவனங்களில் சட்டப்படி தேசிய விடுமுறை நாளில் பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்காமலும் மற்றும் மாற்று விடுமுறை அளிக்காமலும், அதற்கான முறையான அறிவிப்பு அளித்து அனுமதி பெறாமல் பணியாளர்களை பணிக்கு அமர்த்தியது தெரியவந்தது.

இதனையடுத்து அந்த 101 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை, தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) செந்தில்குமரன் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்