சென்னை கோட்டையில் காலை 9 மணிக்கு வெடிக்கும் என்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்த காவலாளி கைது

சென்னை கோட்டையில் காலை 9 மணிக்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று தொலைபேசியில் மிரட்டல் விடுத்த காவலாளியை போலீசார் கைது செய்தனர். அதிகாரிகள் தன்னை கண்காணித்ததால் மிரட்டல் விடுத்ததாக கைதானவர் வாக்குமூலம் அளித்தார்.

Update: 2018-08-15 23:30 GMT

கோவை,

சென்னையில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை 8 மணி அளவில் போன் அழைப்பு வந்தது. அதை போலீஸ்காரர் ஒருவர் எடுத்து பேசியபோது, எதிர்முனையில் பேசிய நபர், சென்னை கோட்டையில் வெடிகுண்டு வைத்து உள்ளேன். அது சரியாக காலை 9 மணிக்கு வெடிக்கும். முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடி ஏற்ற முடியாது, முடிந்தால் தடுத்து பாருங்கள் என்று கூறினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த போலீஸ்காரர், நீங்கள் யார் என்று கேட்டபோது, நான் தீவிரவாதி, முடிந்தால் கண்டுபிடியுங்கள் என்று கூறி அழைப்பை துண்டித்து விட்டார். இது குறித்து அந்த போலீஸ்காரர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து போலீசார் அந்த நபர் பேசிய எண்ணை ஆய்வு செய்தபோது, அந்த மர்மநபர் செல்போனில் இருந்து பேசியது தெரியவந்தது.

மேலும் போலீசார் அந்த நபர் எங்கிருந்து பேசி உள்ளார் என்பது குறித்து ஆய்வு செய்தபோது, கோவையில் இருந்து பேசியது தெரியவந்தது. உடனே சென்னையில் உள்ள போலீசார், கோவை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அந்த செல்போன் எண்ணை வைத்து கண்காணித்தபோது, அந்த செல்போன் எண்ணை வைத்து இருப்பவர், கோவை ஹூசூர் ரோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பதாக சிக்னல் காட்டியது.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். அப்போது அங்கு இருந்த காவலாளி நான் தான் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு போன் செய்தேன் என்று கூறினார். உடனே போலீசார் அந்த காவலாளியை பிடித்து விசாரணை செய்தனர்.

இதில் அவர், திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கல்பட்டியை சேர்ந்த மகாராஜா என்கிற மாரிராஜா (வயது 40) என்பதும், அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 4 மாதமாக காவலாளியாக வேலை செய்து வருவதும் தெரியவந்தது. அத்துடன் அவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகள், ஒரு மகன் இருப்பதும் தெரியவந்தது.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது பற்றி போலீசார் கேட்டபோது, என்னை அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் எப்போதும் கண்காணித்து கொண்டு இருக்கிறார்கள். இதனால் எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. எனவேதான் நான் காலையில் வேலைக்கு வந்ததும், செல்போனை எடுத்து அதில் 100 என்ற எண்ணுக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தேன் என்று கூறினார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:–

செல்போனில் இருந்து 100 என்ற எண்ணுக்கு போன் செய்தால் அது சென்னையில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்குதான் செல்லும். கோவையில் கைதான மாரிராஜாவிடம் விசாரணை செய்தபோது, 100 என்ற நம்பருக்கு போன் செய்தால் முதல்– அமைச்சருக்கு செல்லும் என்று நினைத்து போன் செய்தேன் என்று பதிலளித்தார்.

எதற்காக முதல்–அமைச்சருக்கு போன் செய்தாய் என்று கேட்டால், நான் வேலை செய்து வரும் இடத்தில் நிற்கும்போது, அந்த வழியாக காரில் செல்லும் அதிகாரிகள் என்னை பார்த்தபடி செல்கிறார்கள். உன்னை பார்க்க தானே செய்கிறார்கள் என்று கேட்டபோது, அவர்கள் என்னை பார்க்க வில்லை, என்னை கண்காணிக்கிறார்கள். எனவேதான் நான் என்ன செய்வது என்று தெரியாமல் 100 என்ற எண்ணுக்கு போன் செய்தேன் என்று கூறினார்.

மாரிராஜா சொன்ன பதிலையே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டு இருக்கிறார். இதை வைத்து பார்க்கும் போது அவர் லேசாக மனநிலை பாதிக்கப்பட்டவர் போன்று இருக்கிறார். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் வீட்டில் இருக்கும்போது தற்கொலைக்கும் முயற்சி செய்து உள்ளார். தற்போது அவர் மீது தகாத வார்த்தைகளால் பேசுதல், மிரட்டல் விடுத்தல் உள்பட 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதையடுத்து போலீசார் மாரிராஜாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்