நீலகிரியில் சுதந்திர தின விழா கோலாகலம்: ஊட்டியில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தேசியக்கொடி ஏற்றினார்

நீலகிரியில் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஊட்டியில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தேசியக்கொடியை ஏற்றினார்.

Update: 2018-08-15 23:00 GMT

ஊட்டி,

நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தேசியக்கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். பின்னர் கலெக்டர் போலீஸ் வாகனத்தில் மைதானத்தை வலம் வந்து, போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார். அப்போது போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா அவருடன் இருந்தார். இதையடுத்து ஆயுதப்படை போலீசார் பேண்டு வாத்தியம் முழங்க வரிசையாக அணிவகுத்து வந்தனர்.

தொடர்ந்து ஊர்க்காவல் படை, தீயணைப்பு வீரர்கள், தேசிய மாணவர் படை, இந்திய செஞ்சிலுவை சங்க மாணவர்கள் அணிவகுத்தபடி வந்தார்கள். இந்த அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஏற்றுக்கொண்டார். முன்னாள் படைவீரர் நல அலுவலகம் சார்பில் 2 பேருக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் நிதியுதவி, வருவாய்த்துறை மூலம் முதியோர் உதவித்தொகை, முதல்–அமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 2 குழந்தைகளுக்கு தலா ரூ.50 ஆயிரம், தாட்கோ மூலம் ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் மானியத்தில் வாகன கடனாக ரூ.9 லட்சம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.81 ஆயிரம் செலவில் நலத்திட்ட உதவிகள் உள்பட மொத்தம் 11 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 68 ஆயிரத்து 846 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ஊட்டி–குன்னூர் சாலை மந்தாடா பகுதியில் அரசு பஸ் விபத்துக்குள்ளானபோது பயணிகளை மீட்ட கேத்தி பேரூராட்சி பணியாளர்கள் 16 பேர், காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர், பொதுமக்கள் மற்றும் காவல்துறை மாநில பேரிடர் மீட்பு பணியில் சிறப்பாக பணிபுரிந்த 6 போலீசார், மாவட்ட மருத்துவம் மற்றும் சுகாதார நலத்துறையில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் பெற்ற டாக்டர் ஜெயகணேஷ் மூர்த்தி உள்பட 5 பேர், கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் நடந்த குடியரசு தின விழாவில் தேசிய மாணவர் படை சார்பில் நீலகிரி மாவட்டத்தில் இருந்து முதல் முறையாக கலந்துகொண்ட கல்லூரி மாணவி பூர்ணா ஹர்ஷினி, தோட்டக்கலைத்துறையில் சிறப்பாக பணிபுரிந்த தோட்டக்கலை இணை இயக்குனர் சிவசுப்ரமணியம் உள்பட 160 பேருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நீலகிரி மாவட்ட பழங்குடியின மக்களான தோடர், கோத்தர் இன மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை அங்கிருந்த அரசு அதிகாரிகள், பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். அதனை தொடர்ந்து பள்ளி மாணவர்களின் படுகர் நடனம் நடந்தது. பெண்கள் பாதுகாப்பு, மரங்களை காப்போம், இயற்கையை நேசிப்போம் போன்றவற்றை வலியுறுத்தும் வேடங்களையும், அப்துல்கலாம், சுபாஷ் சந்திரபோஸ், பாரதியார், விவேகானந்தர், நேரு, பாரத மாதா, ராணுவ வீரர் ஆகியோரின் வேடங்களையும் அணிந்த பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவிகள் தேசியக்கொடி ஏந்தி நடனம் ஆடி அசத்தினார்கள்.

விழா மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்போது லேசான சாரல் மழை பெய்து கொண்டு இருந்தது. கலைநிகழ்ச்சிகளை பொதுமக்கள், பார்வையாளர்கள் உள்ளிட்டோர் தங்களது செல்போன்களில் ஆர்வமுடன் படம் பிடித்தனர். விழாவில் சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குனர் அமர் குஷ்வாஹா, நீலகிரி மாவட்ட வருவாய் அதிகாரி செல்வராஜ், மாவட்ட வன அதிகாரி சுமேஷ் சோமன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கோபி, தம்பிதுரை, போலீஸ் துணை சூப்பிரண்டுகள் திருமேனி, சங்கு, கஜேந்திரன், ஊட்டி நகராட்சி கமி‌ஷனர் (பொறுப்பு) ரவி, ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், தாசில்தார் தினேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். விழாவையொட்டி மைதானத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

ஊட்டி நகராட்சி நிர்வாகம் சார்பில் ஏ.டி.சி. பஸ்நிலையம் அருகே சுதந்திர நினைவு திடலில் நடந்த விழாவில், நகராட்சி கமி‌ஷனர்(பொறுப்பு) ரவி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இதில் நகராட்சி சுகாதார அதிகாரி டாக்டர் முரளிசங்கர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. நகராட்சி மார்க்கெட்டில் மலையரசி சமூக நற்பணி இயக்கம் சார்பில் நடந்த விழாவுக்கு, தலைவர் பொன்னுசாமி தலைமை தாங்கினார். செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் ராபர்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மக்கள் சட்ட மைய இயக்குனர் விஜயன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இதில் பள்ளி மாணவ–மாணவிகளுக்கு கம்பளி ஆடைகள், ஆதரவற்றர்களுக்கு வீட்டு உபயோக பொருட்கள் போன்றவை வழங்கப்பட்டன.

மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி ஊட்டியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. ஊட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கணேஷ் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து ஊட்டி சேரிங்கிராசில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டது. லவ்டேல் மக்கள் நல்வாழ்வு சங்கம் சார்பில் லவ்டேலில் விழா நடந்தது. இதில் சங்க தலைவர் ஆறுமுகம், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் ஊட்டியில் உள்ள கட்சி அலுவலகத்தில் விழா நடைபெற்றது. மாவட்ட தலைவர் விஸ்வநாதன் தலைமையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டன. முன்னதாக அலுவலகத்தில் உள்ள மகாத்மா காந்தி, கர்மவீரர் காமராஜர் ஆகியோரின் புனித அஸ்தி கலசங்களுக்கு சிறப்பு பிரார்த்தனை, பூஜை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அனைவரும் மத ஒற்றுமையை காப்போம், தேசத்தை காப்போம் என உறுதிமொழி ஏற்றனர்.

ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஊட்டி சேரிங்கிராசில் உள்ள அலுவலகத்தில் விழா நடந்தது. நீலகிரி மாவட்ட தலைவர் குமார் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, இனிப்புகளை வழங்கினார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பிரேமா, சுந்தர், ரங்கராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். சோலூர் பிக்கைகண்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் ஆலன் வரவேற்றார். தட்டனேரி கிராமத்தலைவர் தோணன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டது. தொரைஹட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மனோகர் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. முடிவில் உடற்கல்வி ஆசிரியர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்