முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை எட்டியது
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வந்த பிறகு 3-வது முறையாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. இதனால் இடுக்கி மாவட்டத்துக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
தேனி,
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக முல்லைப்பெரியாறு அணை விளங்குகிறது. தமிழக-கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள இந்த அணையின் மொத்த உயரம் 152 அடியாகும். இதில் 142 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ள அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதத்திலும், 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலும் அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. 2016, 2017-ம் ஆண்டுகளில் போதிய மழைப்பொழிவு இல்லாததால் நீர்மட்டம் 142 அடியை எட்டவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு கோடை மழையும், தற்போது கேரளாவில் தீவிரம் அடைந்துள்ள பருவமழையும் கை கொடுத்ததால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வந்தது.
நேற்று முன்தினம் காலையில் அணையின் நீர்மட்டம் 136.10 அடியாக இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரத்து 419 கன அடியாக இருந்தது. பிற்பகலில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. எதிர்பாராத அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்ததால் அணைக்கு திடீரென நீர்வரத்து அதிகரித்தது.
இரவில் நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரம் கன அடிக்கு மேல் அதிகரித்தது. இதனால், அணையின் நீர்மட்டம் 138 அடியை எட்டியது. விடிய, விடிய மழை கொட்டித் தீர்த்ததால் இரவு 2.30 மணியளவில் நீர்மட்டம் 140 அடியை எட்டியது. இதனால் கேரள நீர்ப்பாசனத்துறை அதிகாரிகளுக்கு தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் கொடுத்தனர். தொடர்ந்து இடுக்கி மாவட்டத்துக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு சுமார் 20 ஆயிரம் கன அடி அளவில் இருந்தது. இதனால், அணையில் உள்ள 13 மதகுகளும் திறக்கப்பட்டு வினாடிக்கு 4 ஆயிரத்து 489 கன அடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இந்த உபரிநீரானது வண்டிப்பெரியாறு, வல்லக்கடவு, சப்பாத்து போன்ற பகுதிகள் வழியாக இடுக்கி அணைக்கு செல்கிறது.
தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், நேற்று காலை 6 மணியளவில் நீர்மட்டம் 141 அடியை கடந்தது. அப்போது நீர்வரத்து வினாடிக்கு 23 ஆயிரம் கன அடி வீதம் இருந்தது. இதனால், இடுக்கி மாவட்டத்துக்கு 2-வது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
இதையடுத்து மதகுகள் வழியாக வினாடிக்கு சுமார் 8 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. பின்னர் இந்த தண்ணீர் அளவு வினாடிக்கு 10 ஆயிரத்து 800 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. அதே நேரத்தில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் மதகு வழியாக வினாடிக்கு 2 ஆயிரத்து 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு இருந்தது.
பிற்பகல் 12.50 மணியளவில் அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. இதையடுத்து இடுக்கி மாவட்டத்துக்கு 3-வது மற்றும் இறுதிக்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு 2014-ம் ஆண்டு வழங்கிய தீர்ப்புக்கு பிறகு 3-வது முறையாக நீர்மட்டம் 142 அடியை எட்டியது.
தொடர்ந்து உபரிநீர் வண்டிப்பெரியாறு வழியாக வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் பிற்பகலில் நீர்வரத்து வினாடிக்கு சுமார் 12 ஆயிரம் கன அடியாக குறைந்தது. மாலையில் வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடி தண்ணீர் வரத்து இருந்தது. இதேபோல் திறக்கப்பட்ட உபரிநீரின் அளவு 20 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘நீர்மட்டம் 142 அடியை எட்டியதை தொடர்ந்து நீர்வரத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்துக்கு ஏற்ப உபரிநீர் வெளியேற்றப்படும். காலையில் 23 ஆயிரம் கன அடி நீர்வரத்து இருந்த நிலையில், பிற்பகலில் 12 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து குறைந்துள்ளது. நீர்வரத்து, நீர்மட்டம் உயர்வு குறித்து ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை இருமாநில அரசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்மட்டம் 142 அடியை எட்டிய போதிலும் கசிவுநீர் அளவு இயல்பான அளவில் தான் உள்ளது. அணை பலமாக இருக்கிறது என்பதற்கு இதுவும் ஓர் சான்றாக உள்ளது’ என்றனர்.