மோட்டார் சைக்கிள்கள் திருட்டு வழக்கில் ஒருவர் கைது
மோட்டார் சைக்கிள்கள் திருட்டு வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, ஆர்.கே. பேட்டை பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி திருட்டு போவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள்களை திருடிய மர்ம நபர்களை தேடி வந்தனர்.
பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த ஜானகிராமன் (வயது 45) என்பவரது மோட்டார் சைக்கிளும் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் திருட்டு போனது. இது குறித்து அவர் பள்ளிப்பட்டு போலீசில் புகார் செய்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜானகிராமன் பள்ளிப்பட்டு பஸ் நிலையத்தில் உள்ள டீக்கடையில் டீ சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் மோட்டார் சைக்கிளை டீக்கடை முன்பு நிறுத்தினார்.
கைது
அந்த மோட்டார் சைக்கிள் திருட்டு போன தன்னுடைய மோட்டார் சைக்கிள் என்பது தெரியவந்ததையடுத்து ஜானகிராமன் இது குறித்து பள்ளிப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் ஆந்திர மாநிலம் நகரி அருகே உள்ள மாங்காடு ஏரியை சேர்ந்த ஜமால் (48) என்பவரிடம் இருந்து வாங்கியதை ஒப்புக்கொண்டார். போலீசார் அங்கு சென்று ஜமாலை பிடித்து விசாரித்தனர். மொத்தம் 24 மோட்டார் சைக்கிள்களை திருடி விற்றதை அவர் ஒப்புக்கொண்டார்.
உடனே போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பீமன் மற்றும் போலீசார் இரவோடு இரவாக அந்த பகுதிகளுக்கு சென்று திருடி விற்கப்பட்ட 24 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். மோட்டார் சைக்கிள்கள் திருடி விற்ற ஜமாலை போலீசார் கைது செய்தனர்.