சுதந்திரதின விழாவில் பயனாளிகளுக்கு ரூ.1 கோடியில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்

நாகையில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில் கலெக்டர் சுரேஷ்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து, பயனாளிகளுக்கு ரூ.1½ கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Update: 2018-08-15 22:45 GMT
நாகப்பட்டினம்,

நாடு முழுவதும் சுதந்திர தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. நாகை மாவட்ட விளையாட்டு அரங்கிலும் சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். போலீஸ் சூப்பிரண்டு விஜயக்குமார் முன்னிலை வகித்தார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. இதில் ஊர்க் காவல்படை வீரர்கள், ஆயுதப்படை போலீசார், என்.சி.சி. மாணவர்கள் உள்ளிட்டவர்கள் அணிவகுப்பில் கலந்து கொண்டனர். தொடர்ந்து 8 சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் வருவாய்த்துறையில் ஒருவருக்கு தங்கப்பதக்கமும், 4 பேருக்கு சான்றிதழும் வழங்கப்பட்டன. நாளைய அப்துல்கலாம் விருது வென்ற மாணவர் ஒருவருக்கும், சர்வதேச அளவில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான கடற்கரை கைப்பந்து போட்டிகள், யோகா போட்டிகள் மற்றும் மாநில அளவிலான உயரம் தாண்டுதல், கூடைப்பந்தாட்டம், டேக்வாண்டோ போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற வீரர், வீராங்கனைகள் 6 பேருக்கும், கல்வித்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 2 பேருக்கும், கால்நடை பராமரிப்புத்துறையில் ஒருவருக்கும், சுகாதாரத்்துறையில் 2 பேருக்கும், நகராட்சியில் ஒருவருக்கும், மாற்றுத் திறனாளி ஒருவருக்கும், முன்னாள் படைவீரர் நலத்துறையில் 2 பேருக்கும், கருவூலம் மற்றும் கணக்குத்துறையில் 3 பேருக்கும், தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் 5 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ரூ.6 ஆயிரத்து 450 மதிப்பில் 3 சக்கர சைக்கிள் தலா 2 பயனாளிகளுக்கும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் ரூ.5,018 மதிப்பிலான விலையில்லா சலவைப் பெட்டிகள் தலா 2 பயனாளிகளுக்கும், முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு கல்வி உதவித் தொகை ரூ.75 ஆயிரத்து 69 மதிப்பிலும், சமூக நலத்துறை சார்பில் முதல்-அமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 20 குழந்தைகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.5 லட்சம் மதிப்பிலான வைப்புத் தொகை ரசீதுகளும், வேளாண்மைத் துறையின் சார்பில் பவர் டில்லர் உள்ளிட்ட வேளாண் உபகரணங்கள், விதைநெல் மற்றும் இடுபொருட்கள் என 10 பயனாளிகளுக்கு ரூ.44 லட்சத்து 17 ஆயிரத்து 225 மதிப்பீட்டிலும், தோட்டக்கலைத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு பாசனக் கருவிகள் ரூ.2 லட்சத்து 76 ஆயிரத்து 176 மதிப்பிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து தாட்கோ நிறுவனம் மூலம் சுயதொழில் செய்வதற்கு 7 பயனாளிகளுக்கு ரூ.42 லட்சத்து 66 ஆயிரத்து 214-ம், மகளிர் திட்டம் சார்பில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் 10 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.34 லட்சத்து 80 ஆயிரமும், 5 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் விவசாயம் மற்றும் வேளாண் கருவி வாங்குவதற்கான கடனுதவியும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மூலம் 8 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.33 லட்சம் கடனுதவியும் வழங்கப்பட்டன. மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார், பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 65 லட்சத்து 17 ஆயிரத்து 620 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினரை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினர். இதைத்தொடர்ந்து பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி, அன்னை சத்யா அரசு காப்பகம், நாகூர், மயிலாடுதுறை, செம்பனார்கோவில், திருமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், நாகை உதவி கலெக்டர் கமல்கிஷோர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், பயிற்சி கலெக்டர் மன்சூர், துணை கலெக்டர் (சமூகப்பாதுகாப்பு திட்டம்) வேலுமணி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கோவிந்தராஜுலு, தமிழ்நாடு ஊர்க்காவல்படை மண்டல தளபதி ஆனந்த் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள், பொதுமக்கள், பள்ளி மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்