தாயார் புற்றுநோயால் பாதிப்பு: வேதனையில் பட்டதாரி இளம்பெண் தற்கொலை

கன்னியாகுமரி அருகே தாயார் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வேதனையில் பட்டதாரி இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-08-15 22:15 GMT
கன்னியாகுமரி,

கன்னியாகுமரி அருகே அஞ்சுகூட்டுவிளை இந்திரா காலனியை சேர்ந்தவர் ருபால்டு ராஜ். இவருடைய மனைவி லதா. இவர்களுக்கு சுஜிதா (21) என்ற மகளும், 2 மகன்களும் உள்ளனர். சுஜிதா பி.காம். பட்டதாரி.

லதா புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்காக அவர் ராஜாவூரில் சிகிச்சை பெற்று வந்தார். தாயார் நோயால் பாதிக்கப்பட்டதால் சுஜிதா மனமுடைந்து காணப்பட்டார். அத்துடன் சில தினங்களாக யாருடன் அதிகம் பேசாமல் இருந்துள்ளார்.

இந்தநிலையில், வீட்டில் உள்ள அனைவரும் வெளியே சென்றிருந்தனர். அப்போது, தனியாக இருந்த சுஜிதா மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தாயார் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வேதனையில் பட்டதாரி இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்