வானவில் : ஹாரன் அடிக்காதீங்க...

நம்மிடம் பொதுவான ஒரு பழக்கம் இருக்கிறது. எதை செய்யக் கூடாது என்று கூறுகிறோமோ அதை முதலில் செய்வதுதான்.

Update: 2018-08-15 07:32 GMT
அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து யாரும் கவலைப்படுவதில்லை. இதற்கு உதாரணமாய் ஒரு சம்பவம்...

சென்னையின் பிரதான சாலை - காலை நேரத்தில் தனது குழந்தையை பள்ளிக்கு கொண்டு விடுவதற்காக ஸ்கூட்டரில் புறப்படுகிறார் ஒரு பெண். மிதமான வேகத்தில் சென்ற அவர் திடீரென்று பதறிப்போய் நிலை தடுமாறி சாலையோரம் மோதி விழுந்தார். நல்லவேளை அவர் லேசான காயத்துடன் தப்பினார். தெய்வாதீனமாக குழந்தைக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.

ஏறக்குறைய சென்னை நகரில் 15 ஆண்டுகளாக இரு சக்கர வாகனம் ஓட்டுபவர் அவர். தனது அலுவலகத்துக்கும் மொபெட்டில் சென்று திரும்புபவர். இத்தனை அனுபவம் இருந்தும், அன்று அவர் பதறிப்போய் விழக் காரணமாக இருந்தது பின்னால் வந்த வாகனம் எழுப்பிய பய முறுத்தும் ‘ஹாரன் ஓசை’ தான்.

இளைஞர் ஒருவர் தனது வாகனத்தில் நாய் குரைப்பது போன்ற ஹாரனை வைத்திருந்தார். இது ஒலித்தவுடன் தன்னைத்தான் நாய் துரத்துகிறதோ என்று பதறி, அவர் சாலையோரம் விழுந்துவிட்டார்.

நாள்தோறும் ஏதாவது ஓரிடத்தில் இதுபோன்ற சிறு விபத்துகள் நடக்கத்தான் செய்கிறது. சில சமயம் இந்த விபத்தில் சிக்குபவரின் உயிருக்கே உலை வைக்கும் நிகழ்வாகவும் இது மாறிவிடுவதுண்டு.

‘ஒலி எழுப்பினால் வழி கிடைக்கும்’ (Sound Horn) என்று லாரி, பஸ்களில் எழுதி வைத்திருப்பார்கள். ஆனால் இதுபோன்று பயமுறுத்தும் வகையில் ஹாரன் அடித்தால் ‘வழி’ கிடைக்கிறதோ இல்லையோ பிறருக்கு காது ‘வலி’ நிச்சயம் கிடைக்கும்.

30 முதல் 40 டெசிபல் வரையான சத்தத்தைத்தான் மனிதர்களின் காது தாக்குப்பிடிக்கும். கார் ஹாரன் 100 டெசிபல் முதல் 150 டெசிபல் வரையான சப்தத்தை எழுப்புகிறது. இது ஒரு ஜெட் விமானம் கிளம்பும்போது எழும் ஓசைக்கு நிகரானது. இதுவே இப்படி என்றால் பயமுறுத்தும் ஹாரன் ஓசை பற்றி கேட்கவே வேண்டாம்.

நகர்ப்புறங்களில் வாழும் மக்களின் காது கேட்கும் திறன் குறைந்து போவதற்கு வாகனங்கள் எழுப்பும் ஒலி மாசுதான் காரணம் என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. பெரு நகரங்களில் வாழும் மக்கள் இதுபோன்ற ஒலிமாசுக்களால், 40 வயதிலேயே கேட்கும் திறனை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறார்கள் என்ற ஆய்வு முடிவுகள் நம்மை எச்சரிக்கின்றன.

வாகனங்கள் சாலைகளில் வேகமாக செல்லும் போது ஏற்படும் இரைச்சல் மட்டுமே 80 டெசிபல் அளவுக்கு உள்ளது. இதில் ஹாரன் ஒலி எழுப்பினால் எப்படியிருக்கும். காதைப் பிளக்கும், மற்றவர்களை அலற வைக்கும் ஏர் ஹாரன், வினோத ஹாரன்களுக்கு காவல்துறை தடை விதித்துள்ளது. ஆனாலும் சட்டத்தை மீறுவதுதானே நம்மவர்களுக்கு பழக்கம்.

தேவைப்பட்டால் மட்டுமே ஹாரன் அடித்தால், நமது காது மட்டுமல்ல மற்றவர்களின் கேட்கும் திறனும் மேம்படும். இல்லையெனில் இந்த விஷயமும் ‘செவிடன் காதில் ஊதிய சங்கு போல’ பயனின்றி போகும். 

மேலும் செய்திகள்