வானவில் : சிசிடிவி கேமரா திருடு போனால் என்ன செய்வது?

கண்காணிப்பு கேமரா எனப்படும் ‘சிசிடிவி’ (CCTV) கேமரா இப்போது பரவலாக புழக்கத்துக்கு வந்துவிட்டது.

Update: 2018-08-15 05:21 GMT
தனி வீடு மற்றும் அடுக்கு மாடிக்குடியிருப்புகளிலும் ‘சிசிடிவி’ கேமரா அதிகம் பயன்படுத்தப்படுகிறது. டூம், புல்லட், சி மவுன்ட், டே/நைட், இன்பிராரெட், நெட்வொர்க் ஐபி, வயர்லெஸ், ஹெச்டி என பல வகைகளில் சிசிடிவி கேமராக்கள் வந்துள்ளன. தேவைக்கேற்ப இவற்றை வாங்கி பயன்படுத்தலாம்.

‘சிசிடிவி’ கேமரா என்பது கண்காணிப் புக்காக பயன்படுத்தப்படுகிறது. இதனால் வீட்டின் நுழைவாயில் அல்லது எந்தெந்த பகுதிகளில் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் கேமரா பொருத்துகின்றனர்.

திருடர்களை பிடிக்க நவீன கருவிகளை நாம் பயன்படுத்தினாலும், திருடர்களும் தற்போது நவீன தொழில்நுட்பத்துக்கேற்ப தங்களது உத்திகளை மாற்றி வருகின்றனர்.

சமீபத்தில் ஆளில்லாத ஒரு வீட்டில் நுழைய முயன்ற திருடன் முதலில் திருடியது அங்கிருந்த சிசிடிவி ரெக்கார்டரைத்தான். முகத்தை மறைத்துக் கொண்டு ஒருவர் வருவது வரை பதிவாகியுள்ளது. அதன் பிறகு ரெக்கார்டரை திருடிச் சென்றதால் மேற்கொண்டு விவரமே பதிவாகவில்லை. ஆளில்லாத வீட்டினுள் நுழைந்து நகை உள்ளிட்ட விலை உயர்ந்த பொருள்களை அவர் திருடிச் சென்றுள்ளார்.

இது குறித்து பாதுகாப்பு கருவிகளான சிசிடிவி கேமரா உள்ளிட்டவற்றை தயாரிக்கும் நிறுவனத்திடம் கேட்டபோது, ரெக்கார்டருக்குப் பதிலாக பதிவுகளை கிளவுட் கம்ப்யூடிங்கில் பதிவு செய்துவிட்டால் கேமராவில் பதிவாகும் திருடனின் புகைப்படத்தை கிளவுட் கம்ப்யூடிங்கிலிருந்து எடுத்துவிட முடியும் என்று தெரிவித்தனர்.

இதேபோல பெரிய நிறுவனங்களில் ஊழியர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வைத்திருக்கும் கேமராவில் சில சமயங்களில் காட்சிகள் பதிவாகாமல் போய்விடும். இதற்குக் காரணம் ரெக்கார்டரை ஊழியர்கள் பதிவு செய்யாமல் அணைத்து விடுவதுதான். அந்த சமயங்களில் தில்லு முல்லு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இது போன்ற நிகழ்வுகளைத் தடுக்க, ரெக்கார்டருக்குப் பதிலாக கிளவுட் கம்ப்யூடிங்கில் தாமாகவே பதிவு செய்யும் முறையைப் பின்பற்றினால் இணையதள இணைப்பு பாதிக்கும்போதுதான் பதிவாகாமல் போகும். மற்றபடி தில்லுமுல்லுகளை தவிர்க்க முடியும்.

சிசிடிவி கேமரா வாங்கி பொறுத்துவது மட்டுமல்ல, அதில் இருந்து தப்பிக்கும் தொழில்நுட்பம் அறிந்த திருடர்களிடமிருந்து எப்படிக் காப்பது என்பதையும் அறிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

மேலும் செய்திகள்